கோவையில் இன்று தினசரி கொரோனா பாதிப்புகள் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மாவட்டத்தின் மொத்த தொற்று பாதிப்பு 2 இலட்சத்தை கடந்துள்ளது. சென்னையை விட கோவையில் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தன. கோவையில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் இன்று 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று 1982 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று 2056 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்றைய தினத்தை விட 74 பேருக்கு குறைவாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து ஆயிரத்து 644 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 18 ஆயிரத்து 274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்றில் இருந்து 2283 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 81 ஆயிரத்து 654 பேராக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா தொற்றால் இன்று 27 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1716-ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்
கொரோனா பாதிப்பில் ஈரோடு தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இன்றும் சென்னையை விட ஈரோட்டில் அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்று 1353 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். 1982 பேர் குணமடைந்துள்ள நிலையில், 11 ஆயிரத்து 892 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 74 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்புகள் 489-ஆக உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இன்று 844 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். 1777 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 ஆயிரத்து 567 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு 73751 ஆகவும், குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 56553 ஆகவும், மொத்த உயிரிழப்பு 631-ஆகவும் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 415 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 515 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகமாக உள்ள மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.