வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதியில், தொடர் மழை காரணமாக மலையடிவார கிராமங்களை நகர பகுதியோடு இணைக்கும் சாலை நீருக்கடியில் மூழ்கி உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மலையடிவார கிராமங்களான காந்தவயல், காந்தையூர், ஆளூர், உளியூர் என நான்கு கிராம மக்கள் பவானி ஆற்றின் கிளை ஆறான காந்தையாற்றை கடந்தே லிங்காபுரம் என்னும் நகரத்தை ஒட்டியுள்ள ஊரை வந்தடைய வேண்டும். பவானிசாகர் அணையின் பின்புற நீர்தேக்க பகுதியில் அமைந்துள்ள இக்கிராமங்கள் அணையின் நீர்மட்டம் நூறு அடியை கடந்தாலே வெள்ளம் சூழ்ந்து இப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்க துவங்கி விடும்.

Continues below advertisement




கடந்த 3 மாதங்களுக்கு முன்பே அணையின் நீர் தேக்க பகுதியில் பெய்த மழை காரணமாக லிங்காபுரம் - காந்தவயல் இடையே காந்தையாற்றின் மீது கட்டபட்டிருந்த இருபதடி உயர் மட்ட பாலம் நீருக்குள் மூழ்கி விட்டது. இப்பாலத்தின் இணைப்பு சாலையின் மேடான பகுதிகள் மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரிந்த நிலையில், பாலம் இல்லாததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நான்கு கிராம மக்கள் மிகவும் ஆபத்தான முறையில் பரிசல்கள் மூலம் காட்டாறான காந்தையாற்றை கடந்து நகர பகுதிக்கு சென்று திரும்பி வந்தனர். விவசாயம், மருத்துவம், கல்வி, வேலை என அனைத்திற்கும் இப்பகுதி மக்கள் லிங்காபுரம் வழியே நகரப் பகுதிக்கு வந்தாக வேண்டிய சூழலில், வேறு வழியின்றி இம்மக்கள் பரிசல் பயணத்தையே நம்பியிருந்தனர். 




இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தற்போது லிங்காபுரம்-காந்தவயல் சாலை முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி விட்டது. இதனால் இப்பகுதி மக்களின் பரிசல் பயண தூரம் மேலும் அதிகரித்துள்ளது. சுமார் முக்கால் மணிநேரம் பரிசலில் பயணித்தால் மட்டுமே அக்கரையை அடைய முடியும் என்ற நிலையில், இப்பயணத்தின் ஆபத்தும் அதிகரித்து விட்டது. இதனை கருத்தில் கொண்ட கோவை மாவட்ட நிர்வாகம் தற்போது வருவாய்த்துறை மூலம் பைபர் படகு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இன்று முதல் படகு போக்குவரத்து துவங்கியுள்ளது.




இதன் மூலம் கிராம மக்களின் பரிசல் பயணம் தவிர்க்கப்பட்டு, அரசு சார்பில் பாதுகாப்பான வகையில் படகு பயணம் துவங்கியுள்ளது. மாணவர்கள், பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் எனவும், நீரின் மட்டம் குறையும் வரை இந்த படகு போக்குவரத்து பயன்பாட்டில் இருக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் தாங்கள் சந்தித்து வரும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பாலத்தின் உயரத்தை அதிகரித்து புதிதாக கட்டித்தர அரசு முன்வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.