வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நொய்யல் மற்றும் பவானி ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் கனமழை விட்டு விட்டு பெய்தது. குறிப்பாக நள்ளிரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை–அவிநாசி சாலையில் உள்ள உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சுரங்க பாதையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேம்பாலத்தின் மேல் அதிக வாகனங்கள் செல்ல வேண்டி இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதே போல மேட்டுப்பாளையம் சாலையில் கிக்கானி மேல் நிலை பள்ளியின் அருகில் ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு தேங்கியுள்ள மழை தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல உப்பிலிபாளையம் சிக்னல் அருகே உள்ள காவலர் சமுதாயக் கூட வளாகத்தில் இருந்த பூவசரம் மரம் ஒன்று மழை காரணமாக கீழே சாய்ந்து விழுந்தது. இதேபோல ரெயின் போ பகுதியில் ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. இதில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு கார் சேதமடைந்தது. அந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ள பாதிப்புகள் உள்ள பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ராஜாகோபால் சுங்கரா ஆய்வு செய்தார்.
இன்றும் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நிலையில், பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்