கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்து பெய்தபடி உள்ளது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் மூன்றாவது வீதியை சேர்ந்த 63 வயதான பழனிச்சாமி என்ற கூலி தொழிலாளி அங்குள்ள ஒரு கடையில் இரவு படுத்து உறங்கியுள்ளார். அந்த கடை புதுப்பித்து கட்டப்பட்டு வரும் நிலையில், தொடர் மழை காரணமாக கடையின் ஹாலோ பிளாக் சுவர் சரிந்து விழுந்ததோடு தகரத்தாலான  மேற்கூரையும் விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கி கொண்ட பழனிச்சாமி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வட கிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது.  நேற்றிரவு 11 மணிக்கு பின்னர் ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன் பாளையம், புலியகுளம், ரெட்பீல்டு, சுங்கம், ராமநாதபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், செல்வபுரம், வெள்ளலூர், இடையர்பாளையம், குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார். இதேபோல கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.