வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில் அக்டோபர் மாதம் வரை 49% மழை குறைவாக பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.


தென்இந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.


கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக கனமழை பெய்தது.  நேற்றிரவு 11 மணிக்கு பின்னர் ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன் பாளையம், புலியகுளம், ரெட்பீல்டு, சுங்கம், ராமநாதபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், செல்வபுரம், வெள்ளலூர், இடையர்பாளையம், குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.