கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாடுகள் அம்மை நோய் தாக்கி உயிரிழந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகள் வேளாண்மை சார்ந்து உள்ளது. குறிப்பாக தென்னை, காய்கறிகள் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு உள்ளிட்டவை முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்தில் ஏராளமான ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். விவசாயத்திற்கு கால்நடைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்நிலையில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மாடுகளுக்கு அம்மை நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் அம்மை நோயினால் உயிரிழக்கும் மாடுகளை தங்களது. தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


இது குறித்து விவசாயிகள் கூறும் போது, “அம்மை நோயில் பாதிக்கப்படும் மாடுகளின் கால்களில் முதலில் வீக்கம் உண்டாகிறது. அதைத்தொடர்ந்து உடலில் கொப்பளங்கள் ஏற்படுகிறது. அதனால் சோர்ந்து போகும் மாடுகள் தீவனம் உட்கொள்ள முடியாத நிலையில், கால் மூட்டுகளில் வலி ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறது. இந்த நோய் தாக்கம் ஏற்படும் மாடுகளால் படுக்க முடியாது. 15 அல்லது 20 நாட்களுக்கு நின்றவாறே இருக்கும் மற்ற மாடுகளுக்கு அம்மை நோய் பரவாமல் இருக்க பாதிப்பு ஏற்பட்ட மாட்டை தனியாக வைத்து பராமரிக்க வேண்டியுள்ளது. 




நோயின் காரணமாக தண்ணீர் மற்றும் தீவனம் உட்கொள்ளாத நிலை ஏற்படுகிறது. இதனால் பால் உற்பத்தியும் வெகுவாக குறைந்து விட்டது. தற்போது இந்த நோயின் தாக்குதல் வேகமாக பரவி பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பகுதிகளில் மட்டும் அதிகளவில் உள்ளது. குறிப்பாக சினைமாடுகளை அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. இதனால் கருக்கலைந்து விடுவதால் கன்று குட்டிகள் ஈன்று எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. அம்மை நோயை கட்டுப்படுத்த மருந்துகளும் இல்லாததால் தங்களுக்கு தெரிந்த பழைய வைத்தியங்களை செய்து வருகிறோம். இந்த நோயை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தற்போது பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் வர உள்ளது. பொங்கல் என்றாலே வருடம் முழுவதும் விவசாயத்திற்கு பாடுபடும் கால்நடைகளுக்கு மரியாதை செய்து வழிபடுவது தான் முக்கிய நிகழ்வாகும். அவ்வாறு முக்கிய விழா கொண்டாட உள்ள நிலையில் கால்நடைகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது மிகுந்த மனவேதைனை அளிக்கிறது. கால்நடைகள் அம்மை நோயால் உயிரிழக்கும் போது, எங்களது சொந்த நிலத்திலேயே குழி தோண்டி புதைக்கும் சூழல் உள்ளது. போர்க்கால அடிப்படையில் அரசு இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அம்மை நோய் மேலும் பரவாமல் தடுத்து கால்நடைகளை காப்பாற்ற நடவடிக்கை வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண