கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கோவை குற்றாலம் மூடப்பட்டுள்ளது. இதேபோல உதகை - மேட்டுப்பாளையம் மலை இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் கரையைக் கடந்த பின்னரும், தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் இரவு நேரங்கள் மட்டுமின்றி, பகல் நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. கோவை மாநகரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இரவு நேரத்தில் காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், போத்தனூர், வெள்ளலூர், கணபதி, சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மிதமான மழை பெய்தது. கோவை மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக வேளாண்மை பல்கலைக்கழகம் பகுதியில் 6.9 செ.மீ. மழையும், தொண்டாமுத்தூர் பகுதியில் 6 செ.மீ. மழையும், பில்லூர் அணை பகுதியில் 5.7 செ.மீ. மழையும், மாக்கினம்பட்டி பகுதியில் 4.2 செ.மீ. மழையும் பதிவானது. இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. தொடர் மழை மற்றும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாடிவயல் அருகேயுள்ள கோவை குற்றாலத்தில் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேபோல நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் இரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளதால் உதகை - மேட்டுப்பாளையம் மலை இரயில் சேவை இன்று ஒருநாள் இரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல உதகை - குன்னூர் இடையேயான இரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. பாறைகள் அகற்றும் பணிகள் நடந்து வருவதாகவும், அப்பணிகள் முடிவடைந்த பின்னர் இரயில் சேவை துவங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்