மேற்கு மண்டலத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது எனவும், சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், "இந்தாண்டு மேற்கு மண்டலத்தில் நடந்த பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. சிறப்பாக பணி செய்தவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. கடந்த வாரம் கோவை வந்த டிஜிபி சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என கூறினார்.
கடந்த 2021 ம் ஆண்டில் கோவை காவல் சரகத்தில் 142 கொலை வழக்குகள் பதிவாகின. ஆனால் இந்தாண்டு 91 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. ஈரோட்டில் பாதிக்கு பாதியாக கொலை வழக்குகள் குறைந்துள்ளது. கோவை காவல் சரகத்தில் 30 சதவீதம் கொலை வழக்குகள் குறைந்துள்ளது. மேற்கு மண்டலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. போக்சோ வழக்குகளை பொருத்தவரை கடந்தாண்டு 17 வழக்குகளில் தீர்ப்பு பெறப்பட்டது. இந்தாண்டு 87 வழக்குகளில் தீர்ப்பு வந்துள்ளது. கஞ்சா தொடர்பாக 4 மாவட்டங்களில் 1400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 28 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கஞ்சா இல்லாத கிராமங்கள் உருவாக்கும் முயற்சியாக 1211 கிராமங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு, 721 கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளது. கஞ்சா இல்லாத நகரம் என்ற இலக்கை விரைவில் அடைவோம். கடந்தாண்டு 9 ஆதாய கொலைகள் பதிவான நிலையில், இந்தாண்டு 4 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. குற்றங்கள் குறைந்துள்ளது. காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் மூலம் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதனால் பல இடங்களில் பெண் குழந்தைகள் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்தனர்.10 வழக்குகள் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் மூலம் வந்துள்ளது.
குட்கா மற்ற இடங்களில் இருந்து வருகிறது. இது தொடர்பாக 2730 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 44 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா கடத்தி வர புதிது புதிதாக முயற்சி செய்து வருகின்றனர். எல்லா லாரிகளையும் சோதனை செய்ய முடியாது. தகவல் அடிப்படையில் சோதனை செய்து குட்கா பறிமுதல் செய்யப்படுகிறது. இந்தாண்டு மேற்கு மண்டலத்தில் 155 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை" எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்