காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சார்ந்தவர்  ராகவன் சுரேஷ். சென்னையில் உள்ள ஓவியக் கல்லூரியில் விளம்பரத் துறையில் பட்டம் பெற்ற இவர், சினிமா, விளம்பரத்துறை, அரசுத் துறையிலும் பணி புரிந்தார். தற்போது இந்திய தாவர மதிப்பிட்டு ஆய்வகத்தின் கோவை கிளையில் பணியாற்றி வரும் இவர், கோவை வடவள்ளி முல்லை நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.




வனத்தின் மீதும் வன உயிரினங்கள் மீதும் அதிக பற்றுள்ள ராகவன் சுரேஷ், அழியும் நிலையில் உள்ள விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றை ஓவியங்களாக ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். யானை, புலி, வரையாடு, சிங்க வால் குரங்கு, அணில், வரையாடு ஆகியவற்றை தத்ரூபமாக வரைந்துள்ளார்.




பல்லுயிர் சூழல் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள 5000 வகை பூக்கும் தாவரங்கள், 139 வகை பாலூட்டிகள், 176 இரு வாழ்விகள்  உள்ள நிலையில், அதில் அழியும் நிலையில் உள்ள தாவரங்கள், பறவைகள், விலங்குகள் அனைத்தையும் ஓவியமாக வரைந்து வருகிறார். மேலும் அவற்றின் தமிழ் பெயர், அறிவியல் பெயர்கள், தற்போது எந்த பகுதியில் உள்ளது ஆகிய விவரங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுள்ளார். 2018ம் ஆண்டில் துவங்கி 4 ஆண்டுகளில் ஆராய்ச்சியாளர்கள், வன ஆர்வலர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் ஆலோசனைகளை பெற்று 51 அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகள் பூக்கும் தாவரங்கள் 138 ஆர்க்கிட் வகை தாவரங்களையும் ஆவணப்படுத்தியுள்ளார். மேலும் 5 செ.மீ உயரமே கொண்ட தாவரங்களையும் ஓவியமாக வரைந்துள்ளார். 




இதுகுறித்து அவர் கூறுகையில், ”மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள உயிரினங்கள் குறித்து அடுத்த தலைமுறையினர் அறிந்து பயன்பெறும் வகையில் அறிவியல் ரீதியாக ஓவியமாக பதிவு செய்துள்ளேன். இதற்காக கடந்த நான்கு வருடங்களாக கிடைக்கும் நேரங்களை ஓவியம் வரைய பயன்படுத்திக் கொள்கிறேன். விடுமுறை நாட்களில் காலை முதல் இரவு வரை ஓவியம் வரைந்துள்ளேன். உலகில் மிகச்சிறந்த மலைகளில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள உயிரினங்களை எதிர் வரும் தலைமுறையினர்  தெரிந்து கொள்ளும் வகையில் அறிஞர்களின் ஆலோசனைப்படி ஓவியமாக வரைந்து வருகிறேன். இதில் அழிந்து போன களையாடு ஓவியம் மற்றும் அழியும் நிலையில் உள்ள புனுகு பூனை, சருகுமான், வரையாடு ஆகியவற்றையும் ஆவணப்படுத்தி உள்ளேன். சில தாவரங்களின் பகுதிகளை மைக்ரோ ஸ்கோப் மூலம் பார்த்து வரைந்துள்ளேன். 




ஓவியம் வரைந்த பின்னர் அவற்றை அறிஞர்களுக்கு காட்டி அதன் நிறங்கள் அமைப்புகள் சரியாக உள்ளது என சான்று வாங்கிய பின்னர் தான் இதனை காட்சிப்படுத்த முடியும். உலகிலேயே நீலகிரியில் மட்டும் உள்ள நீலகிரி கரும்வெருகு பாம்பு வகை, நீலகிரி காட்டு புறாவை  தனது ஓவியம் மூலம் ஆவணப்படுத்தி உள்ளேன். வன விலங்குகளின் முக்கியத்துவம் அதன் மூலம் காடுகளின் செழுமை குறித்து வரும் தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்காக இத்தகைய உயிரினங்களையும், தாவரங்களையும் ஓவியங்கள் மூலம்  ஆவணப்படுத்தி வருகிறேன். விரைவில் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே காட்சிப்படுத்த உள்ளேன்” எனத் தெரிவித்தார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண