கோவையில் தக்காளி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தக்காளியை கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி பல ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக தக்காளி வரத்து சந்தைகளுக்கு அதிகரித்துள்ளது. கிணத்துக்கடவு, நாச்சிபாளையம் பகுதிகளில் உள்ள சந்தைகளில் இருந்து கேரள மாநிலத்திற்கும், தமிழ்நாட்டின் வெளி மாவட்டங்களுக்கும் தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து தக்காளி வரத்து அதிகரித்து காணப்படுவதால், தக்காளியின் விலை குறைந்து உள்ளது. மேலும் தொடர் மழை மற்றும் பனி பொழிவு காரனமாக தக்காளியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் தக்காளிகள் சந்தையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளது. விளைச்சல் அதிகரித்த போதும், உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சில இடங்களில் தக்காளிகளை விவசாயிகள் குப்பையில் கொட்டிச் செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தக்காளிகள் மற்றும் தக்காளி செடியுடன் உடன் விவசாயிகள் மனு அளிக்க வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலகம் முன்பு தக்காளிக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று கூறி ஒரு கிலோ தக்காளியை 5 ரூபாய்க்கு விற்பனை செய்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இதன் மூலம் சேகரமாகும் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்ப உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறுகையில், "கடந்த ஒரு மாதமாக தக்காளி பயிரிட்ட விவசாயிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் பனியின் காரணமாக தக்காளியில் வெடிப்பு மற்றும் அழுகல் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகளிடம் இருந்து 6 ரூபாய்க்கு தக்காளியை வாங்குகிறார்கள். மக்களுக்கு 25 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதனை அரசு முறைப்படுத்த வேண்டும்.
விளைச்சல் அதிகரித்த நிலையிலும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. தக்காளி பயிரிட்டு வளர்க்க செலவு செய்த தொகை கூட விவசாயிகளுக்கு திரும்ப கிடைக்காத நிலை உள்ளது. இதனால் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தக்காளிக்கு உரிய விலை இல்லாததால் 5 ரூபாய்க்கு விற்பனை செய்தோம். இதன் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்ப உள்ளோம்” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்