கோவை மாவட்டம் அன்னூரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாச்சியர் அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3850 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் வாயிலாக சிப்காட் தொழில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கோவை வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் நேரில் சந்தித்து, அப்பகுதி விவசாயிகள் மனு அளித்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னூர் சிட்கோ அமைப்பதற்காக 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் உள்ள தரிசு நிலம், விவசாய நிலம், வீடு, மரங்கள் உள்ளிட்டவை குறித்து வருவாய் துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நமது நிலம் நமதே என்ற பெயரில் போராட்டக் குழு ஒன்றை தொடங்கினர். இவ்வமைப்பின் சார்பில் அன்னூரை அடுத்துள்ள குழியூரில் 300-க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடத்தி இருசக்கர வாகனங்களில் பேரணி நடத்தினர். இதன் தொடர்ச்சியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலங்கள் அதிகம் உள்ள அன்னூர் சுற்றுவட்டார பகுதியில் சிப்காட் அமைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். விவசாயிகள் போராட்டம் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் தாலுகா அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அன்னூர் தாலுக்கா அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “அன்னூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில்களான கால்நடை வளர்ப்பு, ஆடு, கோழி வளர்ப்பு, பால் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர். கிணற்றுப்பாசனம் மூலமே, விவசாயம் செய்து வருகின்றனர். தொழில் பூங்கா அமைத்தால், விவசாயம் பாதிக்கும். அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டல் பணி நடந்து வரும் நிலையில், தண்ணீர் பஞ்சம் நீங்கும் என்ற நம்பிக்கையில் இருந்த சூழலில், தொழில் பூங்கா அமைக்கும் முயற்சி, அதிர்ச்சி அளிக்கிறது. தொழில் பூங்காவிற்காக விவசாய நிலங்கள் அதிகளவில் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தொழிற்பேட்டையில் ஏற்படும் மாசு காரணமாக சுற்றியுள்ள விவசாயம் பாதிக்கப்படும். எனவே இந்த முயற்சியை கைவிட வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்