10 ரூபாய் நாணயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்திற்கு சுடசுட சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதனை தொடர்ந்து 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் வரத் தொடங்கியது. புழக்கத்திற்கு வந்த சில காலங்களில் அதன் டிசைன் காரணமாக நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 10 ரூபாய் நாணயம் பல இடங்களில் புழக்கத்தில் இருந்தாலும், 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் பரவிய வண்ணமே உள்ளது. இன்றளவும் பல கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயம் மறுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பத்து ரூபாய் நாணயத்தை மளிகை கடை, காய்கறி கடை, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் வாக்குவாதங்களும் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை மறுப்பது சட்டப்படி குற்றம் எனவும், பத்து ரூபாய் நாணயங்களை வாங்குவதை புறக்கணிக்க கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு மின்சார வாரிய அலுவலகம் எதிரே இன்று புதிதாக யாழ் பிரியாணி என்ற பிரியாணி கடை திறக்கப்பட்டது. அந்த கடை திறப்பு விழாவை முன்னிட்டும் 10 ரூபாய் நாணயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், 10 ரூபாய் நாணயங்களை முதலில் கொண்டு வரும் 125 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த ஏராளமான பிரியாணி பிரியர்களும், பொதுமக்களும் அந்த பிரியாணி கடை முன்பு திரண்டனர். அங்கு வந்து வரிசையில் 10 ரூபாய் நாணயங்களுடன் நின்ற 125 பேருக்கு சுடச்சுட ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
பத்து ரூபாய் நாணயங்களை பல்வேறு இடங்களில் வாங்க மறுக்கும் சூழலை மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்பட்டதாக அந்த பிரியாணி கடையின் உரிமையாளர் தெரிவித்தார். 10 ரூபாய்க்கு பிரியாணி வாங்கி பசியாறிய பொது மக்கள், பத்து ரூபாய் நாணயத்தை அனைவரும் வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்திய பிரியாணி கடைக்காரரை பாராட்டி சென்றனர். இதன் காரணமாக அக்கடைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து பிரியாணி வாங்கிச் சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்