ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து கோவைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக வெளியூர் பயணங்களை ரத்து செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வரின் பயணம் இந்த காரணத்திற்காக திடீரென ரத்து செய்யப்பட்டது. தேவர் ஜெயந்தி மட்டுமல்லாமல் அவர் கலந்துக்கொள்ள இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீண்டும் பல மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து இரண்டு நாள் பயணமாக மூன்று மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கோவை சென்ற உடன் அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு செல்கிறார். அங்கு திமுக பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
பின்னர் நாளை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட தடா கோவில் பகுதியில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். தொடர்ந்து அங்கு இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திண்டுக்கல் செல்கிறார். திண்டுக்கல் மதுரை சாலையில் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமிய பல்கலைக்கழக 36 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மு.க. ஸ்டாலின் - பிரதமர் நரேந்திர மோடி ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது பல்வேறு தரப்பினரின் கவனத்தை பெற்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு பின் பிரதமர் மோடி வருகையால் திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சத்தில் உள்ளது.