நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனையைச் சேர்ந்த 23 வயதாகும் ராமராஜன் என்பவர் விவசாயத்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி 20 வயதாகும் சித்ரா என்பவர் ஆவார். ராமராஜன் தனது வீட்டில் பப்பி என்ற நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். எப்போதும் அவர் கூடவே சுற்றும் செல்ல நாய் அவர் வேலை செய்யும்போது கட்டுக்குள் சென்று விளையாடிக்கொண்டு இருக்கும். நேற்று முன்தினம் ராமராஜன் சிறுமுகை அடுத்த குஞ்சப்பனை செட்டில்மென்ட் உள்ள தோட்டத்தில் வேலை செய்தார். வழக்கம் போல விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க நாய் பப்பி சற்று தூரத்தில் விளையாடிக்கொண்டு இருந்தது. தொடர் மழை காரணமாகப் பனிமூட்டம் ஏற்பட்டிருந்தது. இதனால், அருகில் இருக்கும் பொருள்கூடக் கண்ணுக்குத் தெரியவில்லை.



அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் தாய் கரடி ஒன்று ராம் ராஜின் தோட்டத்துக்குள் புகுந்தது. இதனை பார்த்ததும்  ராமராஜ் அதிர்ச்சியடைந்து தப்பியோட முயற்சி செய்தார்.அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென கரடி அவரது தலையை தாக்க  முயற்சித்தது. அப்போது ராமராஜ் சுதாகரித்துக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கைகளால் தடுத்து சத்தம் போட்டார். அப்போது சற்று தூரத்தில் இருந்த நாய், எஜமானரின் சத்தம் கேட்டு அங்கு வந்தது. வந்து நின்ற பின்னர் பப்பி பயங்கரமாக குரைத்துள்ளது. பின்பு நாய், கரடிக் குட்டியை விரட்ட தொடங்கியது. மேலும், தாய்க் கரடியை நோக்கியும் மீண்டும் மீண்டும் குரைத்தது. தனது குட்டியை நாய் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் தாய்க் கரடி ராமராஜனை விட்டுவிட்டு, நாயைத் துரத்தியது. இதில், சுதாரித்துக்கொண்ட ராமராஜன் உடனடியாக எழுந்து, கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்துக் கரடியைத் தாக்கினார். இதனால், குட்டியுடன் தாய்க் கரடி அங்கிருந்து தப்பியது.



சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் லேசான காயம் அடைந்த  ராமராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு  ஆஸ்பத்திரியில்  சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ராமராஜ் அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பாசமாக வளர்த்த நாய் கொஞ்சமும் அஞ்சாமல் தன்னை காப்பாற்ற ஓடோடி வந்ததை எண்ணி ராமராஜன் நெகிழ்ந்து போனார். பப்பி தைரிமாகவும் புத்திசாலி தனமாகவும் செயல்பட்டதை தன் மனைவி சித்ராவிடமும் ஊர்மக்களிடமும் சொல்லி நெகிழ்ந்துள்ளார். ராமராஜனை கடிக்க வந்த கரடியை, நாய் விரட்டிச் சென்று காப்பாற்றியது அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எஜமானரை காப்பாற்றிய வளர்ப்பு நாய் பப்பிக்கு ராமராஜன் குடும்பத்தார் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள்  தட்டிக்கொடுத்து தங்கள் நன்றியை தெரிவித்தனர்.