பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு மலர்களைத் தூவி எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் கடந்த இரண்டு நாட்களாக ரூ.104.52க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 31 காசுகள் அதிகரித்து ரூ. 104.83-க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல், ரூ.100.59க்கு விற்பனையான நிலையில், 33 காசுகள் அதிகரித்து ரூ. 100.92-க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களாக அதே விலையில் விற்பனையான பெட்ரோல் டீசல், இன்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட எரிபொருள் பத்திரங்களுக்கு இப்போதைய அரசு 5 ஆண்டுகளில் ரூ.70195 கோடி வட்டி செலுத்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள் மேலும் ரூபாய் 37 ஆயிரம் கோடி வட்டியாக செலுத்த வேண்டியுள்ளதால், எரிபொருள் விலையை குறைக்க இயலவில்லை என்று கூறியிருந்தார்.
ண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட கடன் சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்புடையதே. ஆனால் மத்திய மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை தீர்வு இல்லை. 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.
முன்னதாக, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது.
இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பெட்ரோல் நிலையத்தின் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு மலர்களைத் தூவி எதிர்ப்பு தெரிவித்தனர்.