கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் நடைபெற்றது. கடந்த மாதம் ஜூன் 23ஆம் தேதி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் சிபிசிஐடி காவல் துறையினர், இதுவரை நடந்த விசாரணை அறிக்கையை இன்று நடைபெறும் விசாரணையில் இடைக்கால அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது, மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் இல்லாததால் குடும்ப நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது.


இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறை குழு மேற்கு வங்கத்தில் விசாரணை நடத்தி வருவதால், விசாரணையை மேலும்  விரிவுபடுத்த கூடுதல் காவல் அவகாசம் அளிக்க வேண்டுமென சிபிசிஐடி காவல் துறையினர் தரப்பில் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இவ்வழக்கு விசாரணையை வருகின்ற செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், ”தற்போது வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் புலன் விசாரணை குறித்து நீதிபதியிடம் எடுத்துக் கூறப்பட்டது. வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆதாரங்களை குறித்து குஜராத் நீதிமன்றத்திலிருந்து அறிக்கைகள் பெற வேண்டிய நிலை இருப்பதாலும், புலன் விசாரணை தொடர்பாக செல்போன் டவர்களின் லொகேஷன்களை ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது என்பதை நீதிபதியிடம் எடுத்து கூறினோம். இதனை கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் எட்டாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்” எனத் தெரிவித்தார்.




முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தினர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தினர்.  


முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்ட பலரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தனிப்படை காவல் துறையினர் 300 க்கும் மேற்பட்ட நபர்களிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்டது. இதையடுத்து ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.