தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானையை, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் மயக்க கூசி செலுத்தி பிடித்தனர். பின்னர் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அந்த யானை விடப்பட்டது. ஆனால், வனத்தை விட்டு வெளியேறிய அந்த மக்னா யானை, பொள்ளாச்சி பகுதியை கடந்து கோவை மாநகர பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அந்த யானை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது.


இருப்பினும் அந்த மக்னா யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள சரளபதி, தம்பம்பதி, சேத்துமடை போன்ற விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. மேலும் விவசாய விளை பொருட்களையும் அந்த யானை சேதப்படுத்தி வருகிறது. இதனால் இந்த யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த யானையை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்னா யானையை பிடிப்பதற்காக டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து மூன்று கும்கி யானைகளை வரவழைக்கப்பட்டு, சரளப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


கும்கி யானைகளை கொண்டு வந்து பல நாட்களாகியும் வனத்துறையினர் மக்னா யானையை பிடிக்காமல் மெத்தனம் காட்டுவதாகவும், கும்கி யானைகள் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து வனத்துறையிடம் கேட்டால் முறையான பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், மக்னா யானை தொடர்ந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் உடனடியாக மக்னா யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இல்லையெனில் கும்கி யானைகளுடன் வனத்துறையினர் அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


இதேபோல வால்பாறை அடுத்த குரங்கு முடி எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்டத்திற்குள் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால், தேயிலை பறிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட குரங்குமுடி பகுதிகளில் இந்த ஒற்றைக் காட்டு யானை உலா வருகிறது. அப்பகுதியில் பலா மரங்கள் அதிக அளவில் இருப்பதால், பலாப்பழங்களை உண்பதற்காக அந்த யானை தேயிலை தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பணியில் ஈடுபடும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை விரட்ட முற்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளதால், அப்பகுதியில் தேயிலை பறிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த ஒற்றைக் காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண