முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.


இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 250 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர். இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர்.




இதனிடையே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.


இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு மணல் ஒப்பந்ததாரர் ஓ.ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமார் தொடபுடைய நிறுவனங்களில் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல வருமான வரித்துறை சோதனையின் போது சென்னையில் உள்ள ஷைலி நிவாஸ் என்ற அபார்மெண்டில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அங்கு கிடைத்த ஆவணங்கள் கோடநாடு எஸ்டேட்டை தொடர்புபடுத்தியதாக இருந்தது. வருமான வரித்துறை ஆவணங்களை கேட்டு பெற்ற தனிப்படை காவல் துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.




செந்தில்குமார், மணல் ஒப்பந்ததாரர் ஓ.ஆறுமுகசாமி, புதுச்சேரியை சேர்ந்த ஓசன் ஸ்பிரே என்ற ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நவீன் பாலாஜி ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் மூன்றாவது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் மதுரையை சேர்ந்த மில்லேனியம் மால் உரிமையாளர் லால்ஜி வோராவிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஷைலி நிவாஸ் அபார்மெண்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் லால்ஜி வோராவிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண