நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் பெரிய மீசையுடன் நீதிமன்றத்திற்கு சென்ற காவலரை மீசையை கத்தரித்துவிட்டு வரும்படி நீதிபதி கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள அம்பலமூலா காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார் ராஜேஷ் கண்ணா. இவர் பணியாற்றும் காவல் நிலைய வழக்குகள் விசாரணைத் தொடர்பான ஆவணங்களை ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வது வழக்கம். மேலும் குற்ற வழக்குகள் தொடர்பாகவும் ஆஜராவார்.




இந்நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட நீதிமன்றத்திற்கு ராஜேஷ் கண்ணா வழக்கு விசாரணைக்காக சென்று உள்ளார். அப்போது மாவட்ட நீதிபதி முருகனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராஜேஷ் கண்ணா சல்யூட் அடித்திருக்கிறார். அப்போது சிங்கம் படத்தில் நடிகர் சூர்யா வைத்திருந்தது போல ராஜேஷ் கண்ணா பெரிய மீசை வைத்திருந்தார். இதனைப் பார்த்து கோபமடைந்த நீதிபதி முருகன், மீசையை உடனடியாக கத்திரித்து விட்டு வந்து தன்னிடம் காண்பிக்க வேண்டும் எனவும், மீசையை சரியாக வைத்துக் கொண்டு உள்ளே வருமாறும் கண்டிப்புடன் உத்தரவிட்டார்.


இதைக் கேட்டு பயந்த காவலர் ராஜேஷ் கண்ணா, நீதிமன்றத்திலிருந்து உடனடியாக வெளியேறி அருகில் உள்ள ஒரு சிகை திருத்தகத்தில் தனது மீசையை கத்தரித்து அதன் அளவைக் குறைத்திருக்கிறார். பின்னர் மீண்டும் நீதிமன்றத்துக்குச் சென்று நீதிபதியிடம் காண்பித்திருக்கிறார். பின்னர் நீதிமன்றத்தில் தனது பணிகளை ராஜேஷ் கண்ணா தொடர்ந்துள்ளார். இதனிடையே பலர் கூடியிருந்த நீதிமன்றத்தில் அனைவர் முன்னிலையில் நீதிபதி தன்னிடம் நடந்துக் கொண்ட விதம் குறித்து, காவலர் ராஜேஷ் கண்ணா நீலகிரி காவல்துறையின் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கிறார். 




காவலர்கள் தாடி வளர்க்க பல கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், எவ்வளவு பெரிய மீசையை விதவிதமாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இந்த சூழலில் பெரிய மிசை வைத்திருந்த காவலரை நீதிபதி கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப காலமாக பள்ளிக் கூடங்களில் மாணவர்களின் முடிகளைத் தலைமை ஆசிரியர்கள் வெட்டி விட்டு எச்சரித்து வரும் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது நீதிபதிகள் காவலர்களை எச்சரிக்கும் சூழல் ஏற்பட்டது காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண