கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "எங்களது கடமையான கோவை மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தோம். நேர்மையாக வாக்களித்த மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் வணக்கம். இதற்கு முன்பாக பெருந்தொற்று இருந்த காரணத்தால் முன்பாக வரவில்லை. கட்சி நிர்வாகிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், இப்போது வர முடிந்தது. முடிந்தளவு பெருங்கூட்டம் கூட்டாமல், சிறிய சிறிய குழுக்களாக சந்திப்புகளை நடத்தினோம். கொரோனா தொற்று காரணமாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டது, மக்களுக்கான நெருக்கடி. ஆளுங்கட்சி கட்சி பேதம் பார்த்து நெருக்கடி கொடுக்காமல், மக்கள் நலன் பார்த்து கொடுப்பதாகவே நான் கருதுகிறேன். கோவிட் காலத்தில் எங்களது தொண்டர்களை இழந்த எண்ணிக்கை, வலிக்கக் கூடிய எண்ணிக்கை' எனத் தெரிவித்தார்.


மம்தா பேனர்ஜி தலைமையிலான மூன்றாவது அணியில் இணைவீர்களா என்றக் கேள்விக்கு, "மம்தா பேனர்ஜி மூத்த அரசியல்வாதி. என் மீது அன்பு கொண்டவர். சூழல் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டு, அவர் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் இணையத் தயார்" எனப் பதிலளித்தார்.




தொடர்ந்து பேசிய அவர், "கொங்கு நாடு என்பது அரசியல் கோஷம், மக்களின் தேவையாக நான் பார்க்கவில்லை. மக்களே அதற்கு சரியான பதில் சொல்லுவார்கள். கொங்கு நாடு ஒரு அரசியல் கட்சியின் யோசனையாக இருந்தால் ஏற்றுக்கொள்ளாலாம். இது பெரிய கார்பரேட் கம்பெனியின் யோசனை. கிழக்கு இந்திய கம்பெனி இருந்தது போன்று தற்போது வடக்கிந்திய கம்பெனியை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். அதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என திட்டவட்டமாக நம்புகிறேன். இது ஒரு நாடு என்று சொல்லி எங்கள் தோளில் கை வைத்தால் , தோளில் துக்கிவைத்துக் கொள்ள தயார். ஆனால் வியாபாரத்துக்கு செளகரியமாக இருக்குமென எங்கள் வளங்களை தனியாருக்கு கொடுக்க முயற்சி செய்தால், அது கம்பெனி தான். இந்த சுரண்டலுக்கு எந்த மாநிலமமும் இடம் கொடுக்காது என்பது எனது நம்பிக்கை. கலைஞருக்கு நிறைய பாராட்டுகள் உள்ளது. அவருக்கு மக்கள் மனதில் இன்னும் இடமிருக்கிறது. ஆனால் ஏற்கனவே மக்களுக்காக உழைத்த ஆள் பென்னி குயிக். கிழக்கிந்திய கம்பெனியிலும் மனிதாபிமானத்தோடு இது என் மக்கள் என நினைத்து வேலை செய்து இருக்கிறார். அவரது நினைவிடத்தை வைத்திருப்பதில் தவறில்லை. வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்துவோம்.


எந்த அரசாக இருந்தாலும் தனி மனிதர்களை கண்காணிப்பது தவறு. மேகதாது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. இந்தியாவில் அதிக இரட்டை வேடம் போட்டு இருக்கிறேன். 25, 26 படங்களில் இரட்டை வேடம் போட்டுள்ளேன். அப்படி இரட்டை வேடம் போடுவர்களை சட்டென அடையாளம் கண்டு கொள்ளும் திறமை எனக்கு இருக்கிறது. அந்த இரட்டை வேடம் தான் இது. 


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு இயன்றதை செய்து கொண்டிருக்கிறார்கள். இயன்றது என்பது போதாது என்பது தான் பொது கருத்து. இன்னமும் செய்ய வேண்டும். செய்ய முடியும் என்பதை எங்களது கட்சி நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். அது எங்கள் கடமை.


முழுநேர அரசியல்வாதி என எவரும் இல்லை. முழு நேரம் எனக்கு இது தான் தொழில். வேறு வருமானம் இல்லை என்பவர்கள் எதற்காக இங்கே வருவார்கள் என்பது அப்பட்டமான அனைவருக்கும் தெரியும். இப்போது பல அமைச்சர்கள் அரசியலிலும் இருப்பேன், எனது தொழிலையும் செய்வேன் என்பதை பாராட்ட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் என்பது எனது கடமை. அதை செய்தே ஆக வேண்டும். விக்ரம் என்பது நான் எடுக்கும் படம். அது தொழில் அதையும் செய்தாக வேண்டும். 


தோல்வி வந்தால் விட்டுட்டு போவன் என்றால் நான், சினிமாவை விட்டு சென்றிருப்பன். சினிமாவில் நான் கற்ற விஷயங்கள் வெற்றிகள் தந்த பாடங்களை விட, தோலாவிகள் தந்த பாடம் அருமையான பாடம். கோவை மக்கள் எனக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கை அளித்துள்ளார்கள். 1500, 2500 என்பது எல்லாம் கணக்கே கிடையாது. இதைவிட குறைவான ஓட்டுகள் இருந்தாலும், நாங்கள் வந்த வேலை ஓட்டுகளை வாங்கி ஜெயிக்க வேண்டும் என்பதல்ல, அரசியலை மாற்றுவது தான். 


மகேந்திரன் திமுகவில் இணைந்ததால், எந்தவித பாதிப்பு இல்லை. கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் தென்படவில்லை. லாபம் என சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எழுதியது  மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது" என அவர் தெரிவித்தார்.