கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வந்தது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நாள் ஓன்றுக்கு 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நேற்று முதல் கோவையில் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி, டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. பால், மருந்து, காய்கறிகள் ஆகிய அத்தியாவசிய கடைகள் மட்டுமே காலை 6 மணியிலிருந்து செயல்படவும், பிற கடைகள் அனைத்தும் 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மளிகை கடைகளையும் அத்தியாவசியமான கடைகள் பட்டியலில் சேர்க்கவும், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை கடைகள் செயல்படவும் அனுமதிக்க வேண்டும் என மளிகை கடை உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரனை வியாபாரிகள் சங்கத்தினர் நேரில் சந்தித்து மனு அளித்தனர். இது தொடர்பாக வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆலோசனை நடத்திய பின்னர் புதிய கட்டுப்பாடுகளும், சில தளர்வுகளும் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
புதிய கட்டுப்பாடுகள்
அதன்படி கோவை மாவட்டத்தில் அனைத்து மளிகை கடைகள், பேக்கரிகள், காய்கறி கடைகள், டீ கடைகள் இனி காலை 6 மணி முதல் 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மீன் மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் செயல்படவும், டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவையில் உள்ள அனைத்து மால்களும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதி இல்லை எனவும், பொள்ளாச்சி மாட்டு சந்தை இன்று முதல் இயங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்தும் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் செயல்பட தடை விதித்தும் , கோவை மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைகள் இன்று காலை முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றது.