கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வருகை தந்தார். அப்போது அங்கிருந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கமல்ஹாசன் கலந்துறையாடினார். பின்னர் அங்கு காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை திறந்து வைத்தார். இதற்கு முன்னதாக மாணவிகளிடம் பேசிய கமல்ஹாசன், ”நான் படித்த பள்ளி வசதியான பள்ளி. வசதிகள் இருந்தும் நான் பள்ளி படிப்பை தொடரவில்லை. வசதியில்லாத நிலையிலும் படித்து அடையாளம், பெருமை பெற்றுள்ளீர்கள். பள்ளியில் கழிப்பறை வசதியில்லை என்பதை அறிந்து, அவ்வசதியை செய்ய இருந்தோம். தற்போது கழிப்பறை வசதியை செய்து தர அரசு முன் வந்துள்ளது. அரசை செயல்படுத்த வைத்ததில் மகிழ்ச்சி. எல்லா பள்ளிகளிலும் கழிப்பறை வசதி செய்து தரப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து கெம்பட்டி காலனி பகுதிக்கு வந்த கமல்ஹாசன் மக்களிடையே உரையாற்றினார். அப்போது ஒரு தொண்டரின் குழந்தைக்கு விக்ரம் என பெயர் சூட்டினார். பின்னர் பேசிய அவர், “இங்கே நான் வருவது முதல் முறை அல்ல. இங்கே என்ன குறை இருப்பது என்பதை கேட்டறிய வந்துள்ளேன். நான் கடந்த முறை பார்வையிட்டு சென்ற அடுத்த நாள் சுத்தம் செய்தார்கள். ஏதொவொரு நன்மை நடக்க காரணமாக இருப்பது மகிழ்ச்சி. 800 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் கழிவறை வசதி இல்லை. ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளதாக அறிந்தோம்.




நாங்கள் கழிவறை கட்டித் தருகிறோம் என்பதை வாக்குறுதியாக அளிக்கிறோம். இது தேர்தல் வாக்குறுதி இல்லை. 
800 குடும்பமும் என் குடும்பம். இதைச் செய்வது என் கடமை. மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது எங்களால் முடிந்த அளவிற்கு செய்கிறோம். எங்களைப் பார்த்து அரசு செய்தால் எங்கள் பணி முடிந்து விட்டது. இது எங்களுக்கு பெருமை என்பதை விட உங்களுக்கு பயன் கிடைத்தால் மகிழ்ச்சி. கிராம சபையை தூசி தட்டி மறு அறிமுகம் செய்தோம். தற்போது அது தொடர் நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது.


கெம்பட்டி காலனி மட்டுமல்ல அம்மன் குளம் பகுதியிலும் வசதிகள் செய்து தர உள்ளோம். உங்களுக்கும் எனக்குமான தொடர்பு அரசியல் தொடர்பு என்பதை விட அதையும் தாண்டியது. சமூதாயத்திற்கும் எனக்குமான தொடர்பு. நாங்கள் கட்டி தரும் கழிப்பறை நம்முடைய கழிப்பறை. அதை சுத்தமாக ஆரோக்கியமான இடமாக நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். அதை நான் பார்க்க வருவேன். அது க்ளீனாக இல்லை என்றால் வெளக்கமாறை எடுத்து நானே க்ளின் செய்வேன். 




எம்.எல்.ஏ தேர்தலில் உங்களை வெற்றி பெற வைத்தோம் என மக்கள் சொல்கிறார்கள். ஆனால் யார் தோற்க அடித்தார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார். தொண்டர் ஒருவர் அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வேண்டும் எனக் கூறிய போது, ”கண்டிப்பாக. அதை அப்போது பார்ப்போம். இல்லையென்றாலும் வேலை செய்வோம்” என பதிலளித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண