அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை மாநகராட்சி மற்றும் மேட்டுப்பாளையம், மதுக்கரை ஆகிய இரு நகராட்சிகளில் இன்று முதல் கட்டமாக காலை சிற்றுண்டி திட்டம் துவங்கப்பட்டது. கோவையில் இந்த திட்டத்தை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவு சாப்பிட்டார். இந்த திட்டத்தின் மூலமாக கோவை மாவட்டத்தில் மட்டும் 9 ஆயிரத்து 104 மாணவ, மாணவிகள் பலன் அடைகின்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “காலை சிற்றுண்டி திட்டம் மதுரையில் நேற்று முதல்வரின் திருகரங்களால் துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கோவை, ராமநாதபுரம் மாநகராட்சிப் பள்ளியில் உணவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. மாணவ - மாணவிகள் எங்கள் அருகில் அமர்ந்து உணவை எடுத்துக் கொண்ட போது, இந்த திட்டம் யாரால் கொண்டு வரப்பட்டது என கேட்கப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்டது என தெரிவித்தார்கள். உணவு நன்றாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு நாங்கள் வீட்டில் சாப்பிடுவதை விட நன்றாக உள்ளது என தெரிவித்தனர். இந்த சிறப்பு வாய்ந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன்படக்கூடிய மாணவ- மாணவிகள் முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள்.
கோவை மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் சாலைகள் புதுப்பிக்கப்படவில்லை என முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, திட்ட அறிக்கை முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சி மூலமாக சாலைகள் அமைக்க 200 கோடி ரூபாய் நிதிகள் ஒதுக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். முதல் கட்டமாக கோவை மாநகராட்சிக்கு 26 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 125 சாலைகள் முதல் கட்டமாக அரசாணைகள் ஒதுக்கி உள்ளார். வருகின்ற மார்ச் மாதம் 200 கோடி முழுவதுமாக கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகள் வழங்கி இருக்கிறார்கள். பாதாள சாக்கடை திட்டம் கோவை மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் குறிப்பாக ஒண்டிப்புதூரில் 142 கிலோ மீட்டர் பாதாள சாக்கடைகள் திட்டம் 177 கோடி ரூபாய் நிதிகள் வழங்கி அரசாணைகள் வழங்க உள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற பின்பு 15 மாத காலத்தில் உடனடியாக கோவைக்கு அத்தனை நிதிகளையும் திட்டங்களையும் வழங்கியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
மின் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு, ”மின் கட்டணம் உயர்வு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவாகவே உள்ளது. கடந்த ஆட்சியில் 64 விழுக்காடு உயர்த்தி உள்ளார்கள். 2 கோடியே, 37 லட்சம் மின் நுகர்வோர்களில், ஒரு கோடி மின் நுகர்வோர்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. ஒரு கோடி பேருக்கு இலவச மின்சாரம், 63 லட்சம் மின் நுகர்வோருக்கு இரண்டு மாதம் சேர்த்து 55 ரூபாய் உயர்த்தி உள்ளோம். ஏழை மக்கள் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது. சிறுகுறு தொழிலாளர்களை பொறுத்தவரை தமிழகத்தில் தான் குறைவாக உள்ளது.
விசைத்தறி நெசவாளர்களை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக மிகக் குறைந்த கட்டணம். 70 பைசா மட்டும் தான் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. போராட்டம் செய்யக் கூடியவர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் விசைத்தறி மின் கட்டணம் எவ்வளவு உயர்த்தினார்கள் ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும்.
மின் உற்பத்தி திட்டங்கள் ஏற்கனவே இருக்கின்ற கடன் சுமை இருந்தும், தமிழ்நாடு மின்சார வாரியம் 15 மாதங்களில் தடையில்லாத மின்சாரம் வழங்குகிறது. இதற்கு காரணம் முதலமைச்சர் மட்டும் தான். இழுத்து மூட இருந்த மின்சார வாரியத்திற்கு 3500 கோடி மானியத்தை ஒப்புதல் அளித்து, கூடுதலாக 4000 கோடி அளவில் வழங்கி மின்சார வாரியத்தை காப்பாற்றி உள்ளோம்.
மின்சார வாரிய 25 விழுக்காடு மட்டுமே உற்பத்தி செய்கிறோம். 2006 2011 மின் உற்பத்தி திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் கடந்த ஆட்சியில் திட்டங்கள் கொண்டு வராமல் கூடுதலாக, 12 ஆயிரம் கோடி வட்டியை கொடுத்துள்ளார்கள். வாங்கப்பட்ட கடனுக்கு மட்டும் துறைவாரியாக கூடுதலாக நிறுவுதலன் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவுகளை முதல்வர் வழங்கினார். வருகின்ற டிசம்பர் மாதம் 800 மெகாவாட் உற்பத்தியை தொடங்க பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. மின் உற்பத்தி 50 விழுக்காடு அதிகரிக்க வேண்டும் என மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்கான நிதி ஆதாரங்கள் டெண்டர் விடப்படும். தடையில்லாத மின்சாரம் அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என பதிலளித்தார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை குறித்த கேள்விக்கு, “தமிழ்நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டு கடந்த ஆட்சியில் பொறுப்பில் இருந்தவர்கள் தாக்கல் செய்த வேட்பு மனு சொத்து மதிப்பு என்ன? 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்த சொத்து மதிப்பு என்ன? ஐந்து ஆண்டுகளில் அவர்களுடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்று கவனத்தில் கொள்ளுங்கள். இந்த வருமானங்கள் எங்கிருந்து வந்தது? இதனை மடங்கு உயர்ந்திருக்கின்ற சொத்து மதிப்புகள் எதனால் வரப்பட்டது?.
திமுக தேர்தல் வாக்குறுதியில் கடந்த ஆட்சியில் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தோம். அதன்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நீதிமன்றம் சென்று அவர்கள் நிரபராதி என்று நிரூபிக்கலாம். வருமானம் எப்படி வந்தது என்ன சொல்லலாம். எப்படி பல நூறு மடங்கு வருமானம் வந்தது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிலளித்தார்.