’ஸ்டாலின் எச்சரிக்கையை அமித்ஷா புரிந்து கொள்ள வேண்டும்’ - கே.எஸ்.அழகிரி பேட்டி

”உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு நடைமுறைகள் 75 சதவீதம் இந்தியில் நடைபெறுகிறது எனவும், இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை பின்பற்ற வேண்டும் எனவும் பேசியிருப்பது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது”

Continues below advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மனித உரிமைத் துறை சார்பில் ஜிஎஸ்டி பாதயாத்திரை நடைபெறுகிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும், கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் இருந்து சென்னை வரை 56 பேர் 550 கி.மீ தூரம் நடை பயணம் செல்கின்றனர். கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக, இந்த பாதயாத்திரையை அக்கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, “ஜிஎஸ்டி வரியை குறைந்த பட்ச வரியாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடை பயணம் நடைபெறுகிறது. அந்த பயணத்திற்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

Continues below advertisement

உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு நடைமுறைகள் 75 சதவீதம் இந்தியில் நடைபெறுகிறது எனவும், இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை பின்பற்ற வேண்டும் எனவும் பேசியிருப்பது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மொழி பேசப்படுகிறது. அந்த மொழிகள் ஆட்சி மொழிகள் தான். இந்தியாவில் மொழி பிரச்சனை வந்த போது ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும் என தெரிவித்தார்.


மொழி திணிப்பினால் பாகிஸ்தான் இரண்டாக பிரிந்தது.  அந்த நிலை இந்தியாவிற்கு வரக்கூடாது. ஆனால் பாஜக ஒரு அடிப்படைவாத கட்சி என்ற காரணத்தினால் மத வெறி, மொழி வெறி, இன வெறியை உருவாக்குகிறார்கள். இது இந்தியாவை பாதிக்கும். இந்தி பேசும் மாநிலங்கள் தான் இந்தியாவா? இந்தி பேசாத மாநிலங்களும் இந்திய வரைபடத்தில் உள்ளன என்ற  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் எச்சரிக்கையை அமித்ஷா புரிந்து கொள்ள வேண்டும். 

இலங்கை பிரச்சனை வேறு. இந்தியா பிரச்சனை வேறு. இந்தியாவில் விலைவாசி உயர்விற்கு எரிவாயுகள் மீது 26 இலட்சம் கோடி வரி விதிக்கப்பட்டதே காரணம். இந்த வரி விதிக்காமல் இருந்திருந்தால் விலை ஏறி இருக்காது. இந்தியாவில் செயற்கை பஞ்சத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இலங்கையில் பற்றாக்குறை உள்ளது. அந்நிய செலவாணி, உரங்கள் பற்றாக்குறை உள்ளது. தன்னிறைவு ஏற்படாததால் இப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதற்கு ஆளத் தெரியாததே காரணம். இந்திய மக்கள் காலம் தாழ்த்தி தான் முடிவு எடுப்பார்கள். மோடி ஆட்சி 7 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த ஆட்சியினால் ஏற்பட்டுள்ள சிரமத்தை மக்கள் உணரத் துவங்கியுள்ளார். அதிமுக ஆட்சி 10 ஆண்டுகளுக்கு மேல் மக்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதேபோல மத்தியிலும் பத்து ஆண்டுகள் வரும் போது மாற்றங்கள் வரும்” என அவர் தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola