கோவை பேரூர் பகுதியில் நடைபெற்ற நொய்யல் திருவிழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு காவடி ஆட்டம் ஆடினார்.


சிலிண்டர் விலை:


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “மத்திய அரசு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.  இது 33 கோடி குடும்பங்களுக்கு பயனளிக்கும். 200 ரூபாய் நேரடியாக வங்கி கணக்கிற்கு வந்துவிடும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் யாரெல்லாம் சிலிண்டர் பெற்றுள்ளார்களோ, அவர்களுக்கு கடந்த நான்கு ஐந்து மாதங்களாக வழங்கப்பட்டு வந்த 200 ரூபாய் உடன், மேலும் ஒரு 200 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட உள்ளது.


37 லட்சம் குடும்பத்தினர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெற்றுள்ளனர். இதனை நாம் அனைவரும் நிச்சயமாக பாராட்டியாக வேண்டும். உலகில் ரஷ்யா உக்ரைன் போருக்கு பிறகு கேஸ் விலை 200 சதவிகிதம் ஏறிய போதிலும் கூட, மத்திய அரசு விலையை ஏறவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.


வந்தே பாரத்:


இருப்பினும் அது சாமானிய மக்களுக்கு சுமையாக இருந்தது. பிரதமர் எப்படி கடந்த தீபாவளியன்று பெட்ரோல் டீசல் விலையை குறைத்தார்களோ, அதே போல் இந்த ரக்‌ஷா பந்தன், ஓணம் திருநாளில் கேஸ் விலையை குறைத்துள்ளார்கள். மேலும் வருகின்ற காலங்களில் கேஸ் விலையை மேலும் குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அம்ருத் ரயில் நிலையங்களை பொறுத்தவரை இந்தியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் விரிவாக்க பணிகள் 25 ஆயிரம் கோடி ரூபாயில் நடைபெற்று வருகிறது.


வந்தே பாரத் ரயிலை கோவைக்கு இயக்கியுள்ளோம். எனவே கோவைக்கு அருகில் உள்ள போத்தனூர் ரயில் நிலையத்தை அம்ருத் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யும் பணியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கோவையை பொருத்தவரை இரண்டு பெரிய ரயில் நிலையங்கள் கிடைக்கும். 24 கோடி ரூபாய் மதிப்பில் இப்பணிகள் நடைபெற உள்ளது. 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்கின்ற முயற்சியே ஒரு கட்சியாக நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.


என் மண் என மக்கள் முதல் கட்ட யாத்திரைக்கு மக்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றது. தென் தமிழகத்தில் பாஜக வேரூன்றி இருக்கிறது. தென்தமிழகத்தில் வேலைவாய்ப்பு, தண்ணீர், விவசாய வளர்ச்சி ஆகியவை பெரும் சவாலாக உள்ளது. தென்காசியில் செப்டம்பர் 4ம்தேதி இரண்டாம் கட்ட பாதயாத்திரை துவங்கி 19ஆம் தேதி கோவைக்கு வரும்.


முதல்வர் பதவிக்கு அழகல்ல:


காவிரி விவகாரத்தில் ஒரு மாநில அரசு தன்னிச்சையாக தண்ணீர் வழங்க மாட்டேன் என்பது அரசியலமைப்பு சட்டத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. கர்நாடகாவிற்கும் இரண்டு மூன்று மாநிலங்களில் இருந்து தண்ணீர் வருகிறது. அந்த மாநிலங்களும் கர்நாடகாவிற்கு இதேபோல கூறினால் என்ன செய்வார்கள்? தமிழகத்தில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியினர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை புரிந்து கொண்டு கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொல்ல வேண்டும்.


தமிழகத்திற்கு குறைவான நிதி அளிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் குற்றச்சாட்டு வைத்தால், அவர் மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு எவ்வளவு கொடுத்தது என்று அறிவிக்க வேண்டும். தமிழகத்திற்கு கிடைத்துள்ள 10 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கான திட்டங்களின் புள்ளி விவரத்தை வெள்ளை அறிக்கையாக இன்னும் 24 மணி நேரத்தில் பாஜக கட்சி வெளியிடும். முதலமைச்சர் பேசுவதில் அதிகமாக பொய் உள்ளது. முதலமைச்சர் எதைப் பேசுவதற்கு முன்பும் ஒரு முறை கிராஸ் செக் செய்ய வேண்டும். ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல.


சீமான் தோற்பார்:


திமுக ஊழல் பட்டியலை பொருத்தவரை ஒரு முறை நேரடியாக வழங்கினோம். திமுக மீது மட்டும் பாஜக ஊழல் பட்டியல் வெளியிடுகிறது என்று குற்றம் சாட்டும் சீமான், அவரே அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடட்டுமே? நாங்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேசுகிறோம். அதில் குற்றம் குறைகள் சொல்லலாம். ஆனால் சீமான் ஏதாவது வெளியிட்டுள்ளாரா? என்பது தான் எங்களுடைய கேள்வி.  


சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிட்டு கொள்ளட்டும். அவர் போட்டியிட்டு தோற்க தானே போகிறார். அவர் வாய் உள்ளது எனப் பேசுகிறார். சீமான் மீது எனக்கு மதிப்புள்ளது. மோடி வாரணாசியில் போட்டியிட்டு அத்தொகுதியையே மாற்றி விட்டார். இந்தியாவினுடைய மோசமான 112 மாவட்டத்தில் ராமநாதபுரம் ஒன்றாக உள்ளது. அதே போல தான் விருதுநகரும் உள்ளது.


எனவே பிரதமர் அங்கே நிற்க வேண்டுமென்று மக்கள் விருப்பப்படுகிறார்கள். திமுகவில் அதிகமான ஊழல்வாதிகள் இருக்கிறார்களே அவர்களை எதிர்த்து சீமான் போட்டியிடட்டுமே? பிரதமர் என்ன ஊழல் செய்தார்?. சீமான் திமுகவினரை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமே தவிர நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற மோடியை எதிர்த்து எதற்கு போட்டியிட வேண்டும்?” எனத் தெரிவித்தார்.