வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மின் வாரியம் தயார் நிலையில் உள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்சாரத் துறை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது எனவும், மின்சாரம் சீராக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
பவானி சாகர் அணையின் நீர் மட்டம் உயர்ந்ததால் சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம், காந்தவயல் சாலை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் காந்தவயல், மொக்கைமேடு, உழியூர், காந்தையூர் உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கு மாணவர்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பாக சென்று வர மாவட்ட நிர்வாகம் சார்பில் விசைப்படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர் மட்டம் குறையும் வரை இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. விடிய விடிய பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. கன மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
தொடர் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 117 அடியை கடந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 27600 கன அடியாக உள்ளது. தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை இன்று எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 23,000 கன அடியிலிருந்து 28,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளத்து. நேற்று அப்பகுதிக்கு சென்ற அரசு பேருந்துகளையும் தடுத்து நிறுத்தியதால் நடு வழியில் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 100 க்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்றைய தினம் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 112 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கோவையின் குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வருகிறது. நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக 44 அடியாக உயர்ந்துள்ளது.
பவானி சாகர் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.