கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தொழில் துறை மேம்பாட்டு தொடர்பாக கலந்துரையாடல்  கூட்டம் இன்று  நடைபெற்றது. மேற்கு மாவட்ட தொழில் அமைப்புகளுக்கான  இக்கூட்டம் கோவையில் முதன்முறையாக நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் பல்வேறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் துறை அதிகாரிகள் ஆகியோர்  பங்கேற்றனர். தொழில் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தொழில்  கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில்  ஆலோசிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் பேசிய  தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ”கொரோனா பெருந்தொற்றால் நாடு எப்போதும் இல்லாத வகையில் சவால்களை சந்தித்து வருகிறது. புதிய தொழில்நுட்பம் காரணமாக புதிய தொழில்கள் வர தொடங்கியுள்ளது. அவற்றை  நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பதை பார்க்க வேண்டும். காலம் காலமாக பாரம்பரிய தொழிலில் உள்ளவர்களின் மேம்பாடு, தொழிற்துறையில் புதிதாக வருவோர்களின் மேம்பாடு என இருவேறு விவகாரங்களை முக்கியமாக பார்க்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசின் தொழில்துறை முன் உள்ளது. தொழிற்சாலைகள் பெரும்பாலும் சென்னை, அதனை சுற்றியுள்ள இடங்களில் தான் வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் மேம்பாடு மூலம் கோவை போன்ற தொழிற் நகரங்கள் மிகுந்த பலனடையும்.




தடுப்பூசி செலுத்துவதில் கோவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீண்ட கால கோரிக்கையான ஏற்றுமதி கொள்கை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்துறையை மீட்டெடுப்பதே அரசின் நோக்கம். தமிழக வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும் இந்த அரசு முனைப்பாக உள்ளது. அதன் அடிப்படையில் வரலாற்று பாரம்பரியத்தில் குறைவில்லாத  கோவையிலும் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாகவும் இந்த அரசு பரிசீலிக்கும்” என அவர் தெரிவித்தார்.


இதேபோல கோவை சாய்பாபா காலனி பகுதியில் மாநகராட்சியின் சார்பில் நடத்தப்படும்  தூய்மை பணியினை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று  துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”தமிழ்நாடு மக்களுக்கு தினமும் பல வேறு திட்டங்களை  எதிர்கட்சியினர் குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு தமிழக முதலமைச்சர் அளித்து வருகின்றார். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களின்  கல்வி கட்டணத்தை இந்த அரசு ஏற்றுள்ளது.


இந்த தூய்மை பணி முகாம் நேற்றில் இருந்து  தமிழகம் முழுவதும் வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் இந்த அரசு செய்து வருகின்றது. கோவையில் 100 வார்டுகளிலும் 36.12 கி.மீ தூரம் தூய்மைபடுத்தபட இருக்கின்றது. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் சுத்தப்படுத்தபடுகின்றது. மழை நீர் தேங்காமல் இருந்தாலே டெங்கு உருவாகாமல் தடுக்க முடியும் என தெரிவித்த அவர், மழை நீர், வெள்ளம் தூய்மைபடுத்தும் மெகா பணியினை தமிழக முதல்வர் செய்ய உத்திரவிட்டுள்ளார். இது தவிர மக்களை தேடி மருத்தும் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பலன் அடைந்துள்ளனர்.


தமிழகத்திற்கு வாரம் 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் வாரம் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி ஒதுக்கினால் இன்னும் வேகமாக தடுப்பூசி போட முடியும். வன எல்லைகளில் கான்கீரிட் போடும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கின்றது. தற்போதுதான் பட்ஜெட் கூட்டதொடர் முடிந்துள்ளது. மார்ச்சிற்கு பின்னர் இதற்காக நிதி  ஒதுக்கப்படும். கான்கிரிட் தடுப்பு சுவர் போட்டால் யானைகள் அவற்றை இடிக்காது. பன்றி, மான்கள் போன்றவை அந்த அகழி கான்கிரிட் சுவரை  தாண்டி வராது” என அவர் தெரிவித்தார்.