கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் தற்கொலை வழக்கை, சோலூர் மட்டம் காவல் துறையினர் மீண்டும் விசாரணையை துவக்கியுள்ளனர். இன்று தினேஷ்குமாரின் தந்தையிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோத்தகிரி வட்டாச்சியர் சீனிவாசனிடம் விசாரணை அதிகாரியான வேல் முருகன் மறு விசாரணை நடத்த அனுமதி கோரி மனு அளித்திருந்தார். கோடநாடு எஸ்டேட்டில் சுமார் 5 ஆண்டுகள் பணியாற்றிய தினேஷ்குமார் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 2017 ஜீலை 3 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முகாமாக இருந்த கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த போது சிசிடிவி காட்சிகள் ஏன் பதிவாகவில்லை, கோடநாட்டில் 27 சிசிடிவி கேமராக்கள் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், அங்கு சிசிடிவி கேமராக்களே இல்லை என காவல் துறையினர் தெரிவித்தது ஏன் என்பது உள்ளிட்டவை விடை கிடைக்காத கேள்விகளாக உள்ள நிலையில், தினேஷ்குமார் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பார்க்கப்படுகிறது.




கொரோனா தினசரி பாதிப்பில் மீண்டும் நேற்று கோவை முதலிடம் பிடித்தது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள நிலையில், நீலகிரில் சற்று அதிகரித்துள்ளது.


கோவை மாவட்டம் போத்தனூர் – பொள்ளாச்சி இரயில் வழித்தடத்தில் இரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த இரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட நிலையில், 100 கிலோ மீட்டர் வேகத்தில் இரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. இரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வறிக்கை அளித்த பின், இரயில்கள் இயக்கப்படுவது குறித்து இரயில்வே நிர்வாகம் முடிவெடுக்கும். இவ்வழித்தடத்தில் தென்மாவட்டங்களுக்கு மீண்டும் இரயில்கள் இயக்கினால், நேர விரயம் தவிர்க்கப்படும்.


கோவை மாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை இழுபறியில் முடிந்தது. இது தொடர்பாக கோவை ஏடிடி காலணியில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில் தேயிலைத் தோட்ட அதிபர்களுக்கும், தொழிற்சங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.


கோவை உக்கடம் மேம்பால பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், 2023 ம் ஆண்டிற்குள் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை 3.8 கி.மீ தூரம் 280 கோடி ரூபாய் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


சூலூர் விமானப்படை பயிற்சி தள விரிவாக்கத்திற்கு 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போர் மற்றும் இலகுரக போர் விமான மையமாகவும், பயிற்சி மையமாகவும் இப்படை தளம் விளங்கி வருகிறது. 200 ஏக்கரில் புதிய ஓடுபாதை அமைக்கவும், 200 ஏக்கரில் ஆயுதக்கிடங்கு அமைக்கவும் திட்டமிடு திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.




நீலகிரி மலை இரயில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி இன்ஜின்களிலும்,  குன்னூர் – உதகை இடையே டீசல் இன்ஜின்களிலும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘எக்ஸ் கிளாஸ்’ நிலக்கரி நிராவி இன்ஜின் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம் ஒரு பெட்டியுடன் இயக்கப்பட்டது.


சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, 'புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வார்டுகளை மறுசீரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரே சீரான அளவு வாக்காளர்களை கொண்ட வார்டுகளை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது, மாநகராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று கூறினார்.


திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து சம்பா பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 4536 மில்லியன் கன அடி நீர், உரிய இடைவெளியில் ஆற்று மதகு வழியாக வழங்கப்பட உள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருமாநல்லூர், பரமசிவம்பாளையம், காளம்பாளையம் ஆகிய பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் போர்வையில் தங்கியிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.