ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு உடன், கோவை மாநகரில் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் சிங்காநல்லூர் குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளம், செல்வாம்பதி மற்றும் குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம் ஆகிய 9 குளங்கள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குளங்களின் கரைகளை மேம்படுத்தி, பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ.62.17 கோடி மதிப்பில் உக்கடம் பெரியகுளம், ரூ.67.86 கோடி மதிப்பில் வாலாங்குளம், ரூ.31.25 கோடி மதிப்பில் செல்வாம்பதி மற்றும் குமாரசாமி குளம், ரூ.19.36 கோடி மதிப்பில் கிருஷ்ணாம்பதி குளம், ரூ.52.16 கோடி மதிப்பில் குறிச்சி குளம் ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.




கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளம் 340 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஸ்மார்ட் சிட்டி பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டன. தினமும் ஏராளமானோர் குளக்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குளத்தின் பல்வேறு இடங்களில் தமிழர் மரபை பிரதிபலிக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிச்சி குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் திறந்தவெளி அரங்கம் போல ‘செல்ஃபி பாயின்ட்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பரத நாட்டியம் ஆடும் பெண், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள், சிலம்பம் ஆடும் வீரர்கள் என 4 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 25 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்த திருவள்ளுவர் சிலை உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய் எழுத்து, ஆயுத எழுத்து ஆகிய 247 தமிழ் எழுத்துக்களை கொண்டு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில சொற்களும் இடம் பெறும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மழையையும், வெயிலையும் தாங்கும் வகையில், துருப்பிடிக்காத வகையில் ஸ்டீலால் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருவள்ளுவர் சிலை 2.50 டன் எடையில் 20 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் அறம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மாலை மற்றும் இரவு நேரங்களில் விளக்குகளால் ஜொலிக்கும் வண்ணம் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திருவள்ளுவர் சிலை அனைவரையும் கவரும் வண்ணம் அமைய உள்ளது. இந்த சிலை கூடிய விரைவில் இவை மக்கள் பார்வைக்காக திறக்கபட உள்ளது. இச்சிலை திறக்கப்பட்டால் கோவையின் ஸ்மார்ட் சிட்டி பகுதிகளில் முக்கியமான அடையாளமாக திகழும் என மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.