கோவை மாவட்டத்தில் அரசு அறிவித்த கூலியை வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தொடர் போராட்டங்கள் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 648 ரூபாயும், நகராட்சி பகுதிகளில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 606 ரூபாயும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 529 ரூபாயும் என நிர்ணயம் செய்யப்பட்டது.


கூலி நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதைவிட குறைவான கூலியே ஒப்பந்தத்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயித்த கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து தூய்மை பணியாளர் தொழிற்சங்கத்தினர் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். இதனையடுத்து கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 648 ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 412 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகின்றது எனவும், நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 606 ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 475 ரூபாய் மட்டுமே வழங்கபடுகின்றது எனவும், பேரூராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 529 ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 475 ரூபாய் மட்டுமே வழங்கபடுகின்றது எனவும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர். அரசு நிர்ணயம் செய்த கூலியை வழங்க வேண்டும் எனவும், மேலும்தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க கூடாது எனவும் கூறிய தூய்மை பணியாளர்கள், எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடருமென தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக கோவை மாநகரில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்பினர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண