கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இளைஞர்கள் போதை ஊசி போட்டு கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.


கோவை மாநகரப் பகுதிகளில் சமீப காலமாக போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இளைஞர்களையும், கல்லூரி மாணவர்களையும் குறி வைத்து புதிய புதிய வகைகளில் போதை பழக்கத்திற்கு அடிமையாக்கி வருவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதை ஏற்றும் முறையை சிலர் பின்பற்றி வருவது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கோவை இளைஞர்கள் இடையே போதைக்காக போதை ஊசி பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.




கடந்த மாதம் மதுக்கரையில் போதை ஊசியினை வாங்கி தரச்சொல்லி மிரட்டிய  ஜீவானந்தம் என்ற போதைக்கு அடிமையான இளைஞர்  கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த மணிகண்டன் என்ற இளைஞர் விசாரித்தபோது, குனியமுத்தூர் பகுதியில் போதை ஊசி நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போதை ஊசி குறித்து மாநகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் கடந்த வாரம் முகமது யாசர், முகமது முஸ்தபா, முகமது முஸ்தபா, முத்து முகமது என்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 50 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வலி நிவாரணத்திற்கான  மாத்திரைகளை வாங்கி அதில் ஒரு வித டிஸ்டில்டு வாட்டரை  கலந்து  போதை ஊசியாக மாற்றி ஊசி போட்டுக் கொள்வது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.




இந்நிலையில் கோவை உக்கடம் அருகேயுள்ள புல்லுக்காடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் போதை ஊசி போட்டுக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியானது. இதில் இளைஞர்கள் இருட்டான பகுதியில் கூட்டமாக அமர்த்து போதை ஊசியை தயாரித்து போதை ஊசி போட்டுக்கொள்வது பதிவாகி இருந்தது. ஏராளமான இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து போதை ஊசி போடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் கும்பலாக போதைப் ஊசி போடும் வீடியோ காட்சிகள் கோவை மாநகர காவல் துறையினரின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அக்காட்சிகளை வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவை மாநகரில் போதை ஊசி நடமாட்டத்தை கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.




சமூக வலைதளங்களில் வெளியான  வீடியோ காட்சிகளில் இருக்கும் இளைஞர்கள் குறித்தும், அவர்களின் பின்னணி குறித்தும் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். போதை ஊசி மருந்துகளை சப்ளை செய்யும்  கும்பலில் உள்ள நபர்களை கண்டறிந்து கைது செய்யவும், போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது கோவை மக்களின் கோரிக்கையாக உள்ளது.