கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை சிங்காநல்லூர் மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் டாக்டர் முத்தூஸ் என்ற பெயரில் எலும்பு முறிவு சிகிச்சைக்கான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைகளில் நேற்று பிற்பகல் வருமான வரித்துறை அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முதலில் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சிறிது நேரம் சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்து கிளம்பி சரவணம்பட்டி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் அலுவலகத்தில் சோதனையிட்டனர்.


பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை, ஒரு மணி நேரம் இந்த சோதனையானது நடைபெற்றுள்ளது. இந்த சோதனையின் போது சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், பின்னர் இங்கிருந்து கிளம்பி சென்றனர். இது குறித்து மருத்துவமனை தரப்பில் கேட்ட பொழுது பிற்பகல் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட வந்ததாகவும், அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் சோதனை நடத்திய அவர்கள் ஒரு மணி நேரத்தில் கிளம்பி சென்று விட்டதாகவும் தெரிவித்தனர். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம் மருத்துவமனையில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறையினரால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பிரபல மருத்துவமனையில் நடந்த சோதனை காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.