கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது, ”தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாளை மற்றும் நாளை மறுநாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ளார். பிரதமர் தமிழகம் வருவது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உறுதியான தகவல்கள் கிடைத்ததும் தெரிவிக்கப்படும். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உரிய காலத்தில் முன்கூட்டியே கட்சி சின்னத்திற்காக விண்ணப்பம் அளிக்காமல் இருந்ததனால் சின்னம் தற்போது கிடைக்கவில்லை. இதனால் தொண்டர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். இதனை மறைப்பதற்காக என் மீதும் பாஜக மீதும் குற்றம்சாட்டி வருகிறார். சென்னை வெள்ளத்தால் கட்சிக்கான சின்னத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என சீமான் கூறியுள்ளார். அதே நேரத்தில் தான் ஜி.கே. வாசன், டிடிவி தினகரன் ஆகியோரும் விண்ணப்பித்து சின்னத்தை பெற்றுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின், சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டாலும் அதனால் எந்த பலனும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை.


முதல்வர் ரோடு ஷோ ஏன் செய்வதில்லை?


முதல்வர் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கும்போது தான் திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி குறித்து முதல்வர் தெரிந்து கொள்ள முடியும். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் மேற்கொள்வது போல் ரோட்ஷோ எனப்படும் வாகன பேரணியை நடத்தி மக்களை சந்திக்க வேண்டும். தமிழக முதல்வர் ஏன் அதை செய்வதில்லை? பத்தாண்டு கால பிரதமர் ஆட்சியையும் திமுக அரசின் ஆட்சியும் ஒப்பிட்டு பொதுமக்கள் இந்த தேர்தலில் உரிய தீர்ப்பினை வழங்குவார்கள். திமுக இந்து மதத்தை ஆதரிப்பதாக தற்போது பொய் வேஷம் போடுகிறது. தேர்தல் சமயத்தில் ஆதரிப்பதும், அதற்கு பிறகு எதிர்ப்பதும் என நடந்து கொள்வது தான் திமுகவின் இயல்பு. தமிழக தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் கொச்சையாக பேசிக் கொள்வதில் வாரிசுகளுக்கு இடையே போட்டி உள்ளது. குறிப்பாக இந்தியாவிலேயே அதிகமாக கொச்சையாக பேசுபவராக உதயநிதி இருக்கிறார். 29 பைசா மோடி என அவர் மீண்டும் கூறினால், அவரை பீர், டாஸ்மாக், சாராயம், ட்ரக் உதயநிதி என எங்களின் தொண்டர்கள் கூறுவார்கள். மரியாதையை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும்.




கச்சத்தீவு விவகாரத்தை தேர்தலுக்காக பாஜக பயன்படுத்துகிறது என்றால் வெள்ள நிவாரண நிதி குறித்தும் திமுக தேர்தலுக்காக கையில் எடுத்துள்ளது என்று தான் பார்க்க வேண்டும். கோவையில் திமுகவினர் பணம் வாங்கிவிட்டு ஓட்டு போடாதவர்களை தேர்தல் ஆணையத்தின் கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம் என பிரச்சாரம் செய்து வருகின்றனர். கச்சத்தீவு விவகாரத்தை பொறுப்பில்லாமல் கையாண்ட காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பாக கையாள வேண்டும் என பாஜகவிற்கு அறிவுரை வழங்க எந்த தகுதியும் கிடையாது. கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி செய்ததை மக்கள் மறக்க மாட்டார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அதை வெளிக்கொண்டு வந்து மக்கள் முன் வைத்துள்ளோம். ஆர்டிகிள் 6 திரும்ப செயல்படுத்த வேண்டும் அல்லது கட்சதீவினை மீண்டும் வழங்கவேண்டும் என்பது தான் எங்களின் முடிவு” எனத் தெரிவித்தார்.


ஆட்டு பிரியாணி விமர்சனம்


திமுக அதிமுகவினரின் ஆட்டு பிரியாணி விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ”அமைச்சர் டிஆர்பி ராஜா பணக்காரராக பிறந்தவர். எந்த உழைப்பும் செய்யாதவர். அதனால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். தனிமனித தாக்குதலில் தான் இன்றைக்கு கோயம்புத்தூரின் அரசியல் சென்று கொண்டிருக்கிறது. ஆட்டை கொடுமைப்படுத்தாமல் பிரியாணி செய்யுங்கள்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ”பாஜக மகளிர் அணி தலைவர் வானதியும், நானும் அக்கா தம்பி எப்படி இயல்பாக இருப்பார்களோ அப்படித்தான் இருக்கிறோம். எங்களுக்கு நடிக்க தெரியாது. அதை வைத்து தான் ட்ரோல் செய்து வருகின்றனர்.


கச்சத்தீவு விவகாரத்தை தற்போது பேசி வருவதால் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு எந்த விதத்திலும் பாதிக்காது. பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் அவர்களது பொறுப்புகளை உணர்ந்து சரியாகவே பேசியுள்ளனர். கொங்கு மண்டலத்தில் பாரதிய ஜனதா கட்சி கட்டாயம் வெற்றி பெறும். மத்தியில் ஆளும் பாஜகவிற்கும் மாநிலத்தை ஆளும் திமுகவிற்கும் தான் போட்டி என்பதை நீண்ட காலமாக தான் கூறி வருகிறோம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக அரசியலுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்திப் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதை திமுக வெள்ளையறிக்கையாக வெளியிட வேண்டும். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து பெரியார் கடுமையாக விமர்சித்துள்ளார். அதை திமுகவினர் ஏற்றுக்கொள்வாரா?” எனத் தெரிவித்தார்.