கோவையில் ஸ்ரீ தக்க்ஷா ப்ராபர்டீஸ் அண்ட் டெவலப்பர்ஸ் என்ற பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


கோவை மருதமலை சாலையில் நவாவூர் பிரிவு பகுதியில் ஸ்ரீ தக்‌ஷா பிராப்பர்டீ அண்ட் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனர்களில் ஒருவராக மோகன் இருந்து வருகிறார். ஸ்ரீ தக்‌ஷா நிறுவனம் கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வீட்டு மனைகளை வாங்கி, அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் கோவை வடவள்ளி அருகே குருசாமி நகரில் இருக்கக்கூடிய இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான மோகன் என்பவரது வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.




இந்த சோதனையை ஒட்டி, மோகன் வீட்டில் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். கட்டுமான நிறுவனம் மூலம் கிடைத்த வருமானத்திற்கு உரிய வருமான வரியை செலுத்ததால், இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதே போல ஸ்ரீ தக்‌ஷா நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் ராமநாரயணன், அருள் அன்டனி ஆகியோர் இல்லங்களிலும் வருமனா வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையின் முடிவில் தான் வரி ஏய்ப்பு செய்தனரா, என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் தெரியவரும். இந்த சோதனைகள் காரணமாக வடவள்ளி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. ஸ்ரீ தக்‌ஷா நிறுவனத்தின் உரிமையாளர் மோகன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவர் என கூறப்படும் நிலையில், வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல கோவை சாய்பாபா காலணியில் பாரதி பார்க் பகுதியில் உள்ள இ.எஸ்.ஆர். என்ற கட்டுமான நிறுவன உரிமையாளர் ஜெயபிரகாஷ் மற்றும் ராஜ்சேகர் ஆகியோர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.