கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை, நீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டுள்ளது. பில்லூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடியாக உள்ளது. தென் மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.


நேற்றிரவு அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் உயரம் 94 அடியை எட்டியது. இதையடுத்து அணையிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக இன்று அதிகாலை மூன்று மணிக்கு அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால், அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியாக உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 4 மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையிலிருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தியுள்ளது.




இதேபோல தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 97 அடியை கடந்துள்ளது. நீர்வரத்து 9,233 கன அடியிலில் இருந்து 11,456 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 2,926 கன அடியாக இருந்த நிலையில் இன்று 11,456 கன அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து பவானி ஆற்றில் இருந்து குடிநீருக்காக 100 கன அடியும், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்காலில் 800 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.


வெள்ளத்தில் மூழ்கிய பாலம்




மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காந்தவயல் மற்றும் லிங்காபுரம் கிராமங்களுக்கு இடையே காத்தையாறு என்ற ஆறு ஓடுகிறது. இங்கு கடந்த 2004-ஆம் ஆண்டு இருபது அடி உயரம் மற்றும் 200 அடி நீளத்தில் பாலம் கட்டப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர் தேக்கப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், மழைக்காலங்களிலும், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடியை கடக்கும்போதும் வெள்ள நீரில் மூழ்குவது வழக்கம். இந்நிலையில் தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணை நிரம்பி வருவதால், இந்த பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. பாலத்தை இணைக்கும் சாலைகளும் நீருக்கடியில் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், காந்தவயல், ஆளுர், உளியூர், காந்தையூர் ஆகிய 4 கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இப்பிரச்சணைக்கு தீர்வு காண உயர் மட்ட பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.