கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் காதர் மீரான். 41 வயதான இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது வருமானத்தை நம்பியே இவரது குடும்பம் உள்ளது. இந்த நிலையில், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக காதர் மீரான் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கடந்த மே மாதம் 13-ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக காதர் மீரான் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு போதியளவு படுக்கைகள் இல்லாததால் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க இயலவில்லை.


இதையடுத்து, அவரது குடும்பத்தார் உடனடியாக காதர் மீரானை கோவை மாவட்டம் நிலாவூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த காதர் மீரான் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.




அங்கு முதலில் ஆக்சிஜன் படுக்கையிலும், பின்னர் ஐ.சி.யூ..வார்டிலும் மருத்துவமனை நிர்வாகம் காதர் மீரானுக்கு சிகிச்சை அளித்தது. ஆனால், ஆக்சிஜன் படுக்கைக்கு தினசரி ரூபாய் 18 ஆயிரத்து 500ம், ஐ.சி.யூ. படுக்கைகக்கு தினசரி ரூபாய் 36 ஆயிரத்து 500 ஆகவும் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. காதர் மீரானை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவரது குடும்பத்தினரும் மருத்துவமனை கட்டணத்தை அளித்து வந்தனர். இதனால், காதர் மீரான் சேமித்து வைத்திருந்த ரூபாய் இரண்டரை லட்சத்தையும் மருத்துவமனை செலவிற்காக அவரது குடும்பத்தினர் கட்டணமாக செலுத்திவிட்டனர். இருப்பினும், ஐ.சி.யூ. வார்டிலே தொடர் சிகிச்சை பெற்று வந்த காதர் மீரானின் சிகிச்சைக்காக அவர் சொந்தமாக ஓட்டி வந்த ஆட்டோவும் ரூபாய் 2 லட்சத்திற்கு விற்கப்பட்டது. அந்த பணத்தையும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் கட்டணமாக செலுத்தினர்.


ஆனாலும், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த காதர் மீரான் கடந்த ஜூன் 4-ந் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே காதர் மீரான் இறந்த சோகத்தில் இருந்த குடும்பத்தினருக்கு, மருத்துவமனை நிர்வாகம் அளித்த மருத்துவ கட்டண ரசீது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.




26 நாட்கள் மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்த காதர் மீரானுக்கு மருத்துவமனை கட்டணமாக ரூபாய் 14.50 லட்சத்தை மருத்துவமனை நிர்வாகம் நிர்ணயித்தது. வங்கியில் இருந்த சேமிப்பு பணம், ஆட்டோ என்று அனைத்தையும் இழந்து விட்ட நிலையில் இருந்த காதர் மீரான் குடும்பத்தினருக்கு அவர்களது உறவினர்கள் ஒரளவு உதவி செய்தனர். இருப்பினும், உறவினர்கள் செய்த உதவித்தொகை போக மருத்துவமனை நிர்வாகத்திற்கு ரூபாய் 9 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டிய நிலைக்கு சென்றனர். காதர் மீரான் 20 ஆண்டுகள் மிகவும் கடினமாக உழைத்து, இரவு பகல் பாராமல் ஆட்டோ ஓட்டி பொள்ளாச்சியில் சிறியதாக வீடு வாங்கியிருந்தார். அவரது சிகிச்சை கட்டணத்தை செலுத்த போதியளவு பணம் இல்லாததால் காதர் மீரான் ஆசை, ஆசையாக வாங்கிய வீட்டை விற்கும் சூழலுக்கு அவர்களது குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டை விற்றாவது மருத்துவமனை கட்டணத்தை நிச்சயம் திருப்பிச் செலுத்திவிடுவேன் என்று கல்லூரி இறுதியாண்டு படித்து வரும் காதர் மீரான் மகன் கூறுகிறார்.