கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு சென்றான்பாளையம் பிரிவில் கடந்த 20ஆம் தேதி இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சுரேஷ் என்பவரை கிணத்துக்கடவு காவல்துறையினர் கைது செய்தனர். கார் ஓட்டுநர் சுரேஷ் என்பவரை ஜாமினில் விடுவிக்க கார் உரிமையாளரிடம் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடாசலம் ஆகியோர் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் கார் உரிமையாளர் 12 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தலைமை காவலர் வெங்கடாசலத்திடம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை தலைமை காவலர் வெங்கடாசலம், காவல் ஆய்வாளர் சுரேஷிடம் வழங்கியுள்ளார். மேலும் 8 ஆயிரம் ரூபாயை தர வேண்டும் என மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.


இந்நிலையில் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் லஞ்சம் பெற்றது குறித்து கார் உரிமையாளர் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் விசாரணை நடத்தினார். இதில் இருவரும் லஞ்சம் பெற்றது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடாசலத்தை இன்று கோவை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டார். இந்நிலையில் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தலைமைக் காவலர் வெங்கடாசலம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் துறை துணைத் தலைவர் முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.


இதேபோல கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் ஆயுர்வேத மையத்தில் மிரட்டி லஞ்சம் பெற்ற தலைமைக் காவலர் கிஷோர் மற்றும் முதல் நிலைக் காவலர் ஜோதிமணி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆயுர்வேத மையத்திற்கு சென்ற காவலர்கள் வாரந்தோறும் ஒரு தொகை கொடுக்க வேண்டுமென்றும், இல்லையெனில் சட்ட விரோத செயல்கள் நடப்பதாக வழக்குப் பதிவு செய்வோம் என மிரட்டியுள்ளனர்.


இவ்வாறு வாரந்தோறும் தலைமைக் காவலர் கிஷோர் 20 ஆயிரம் ரூபாயும், முதல் நிலைக் காவலர் ஜோதிமணி 5 ஆயிரம் ரூபாயும் பெற்று வந்துள்ளனர். இதுதொடர்பாக ஆயுர்வேத மையத்தின் உரிமையாளர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திடம் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை நடத்தியதில் இருவரும் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவலர் கிஷோர் மற்றும் முதல் நிலைக் காவலர் ஜோதிமணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.


லஞ்சப் புகாரில் சிக்கிய 4 காவல் துறை அதிகாரிகள் ஒரே நாளில் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று சூதாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நெகமம் சிறப்பு உதவி ஆய்வாளர் ஏசுபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் கடந்த இரண்டு நாட்களில் லஞ்சப் புகாருக்கு உள்ளான 5 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.