கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை இன்று நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கோவை காவலர் பயிற்சி பள்ளியில் கோடநாடு மேலாளர் நடராஜனிடம் நீலகிரி மாவட்ட தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே செப்டம்பர் மாதம் அவரிடம் கூடுதல் விசாரணை நடைபெற்ற நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக விசாரணை நடைபெற்றது.
பின்னலாடை நூல் விலை உயர்வை கண்டித்து, இன்று திருப்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நூல் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதால் தொழில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்ட ஆட்சியராக அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சியராக இருந்த இன்னாசண்ட் திவ்யா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை இரண்டு நாட்கள் காவலில் விசாரிக்க காவல் துறையினருக்கு அனுமதியளித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற வளாகத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் நேற்று பரவலாக பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
”அதிகாரிகள் ஆட்சிக்கு கெட்ட பேரு கொண்டு வாரங்க” என திமுக ஆட்சிக்கு ஆதரவாக சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. கள்ளப்பாளையம் பகுதியில் நடந்த டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின் போது, அவர் இவ்வாறு பேசினார்.
சேலம் மாவட்டத்தில் விரைவில் ராணுவ தளவாட மையம், சர்வதேச விமான நிலையம், சிப்கோ, சிப்காட் என 53 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 90% காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபி நேற்று உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமார் 43 லட்சம் ரூபாய் முறைகேடு செய்த முன்னாள் தலைவர், ஊழியர்கள் உள்ளிட்ட 4 பேரை வணிகவியல் குற்றப்புலனாய்வு துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி அருகே யானை தந்தங்கள் காரில் கடத்தி விற்க முயற்சி செய்த மூன்று பேரை வனத் துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 25 கிலோ எடை கொண்ட இரண்டு யானை தந்தங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.