கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதியில் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி கள்ளப்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. கிராமத்தில் புதிதாக மதுபானக்கடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால், மதுபானக் கடை அமைக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கடை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைக் கண்டித்தும் மதுபானக்கடை அமைக்கும் முயற்சியை கைவிடக் கோரியும், கள்ளப்பாளையம் கிராம மக்கள் பல்லடம் - கொச்சின் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமியும் பொது மக்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோவை மாவட்ட டாஸ்மாக் நிறுவன மேலாளர் சம்பவ இடத்திற்கு வந்து கள்ளப்பாளையம் பகுதியில் கடையை திறக்க மாட்டோம் என உறுதி அளித்தால் மட்டுமே அங்கிருந்து கலைந்து செல்வோம் எனக்கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே போராட்டக் களத்தில் செல்போனில் சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி பேசியுள்ளார். அப்போது “அதிகாரிகள் பண்ணுற வேலை இப்போ ஆட்சிக்கு கெட்ட பேரு கொண்டு வரனும். ஆட்சிக்கு கெட்ட பேரு கொண்டு வர ரெடியாகிட்ட போல” என பேசினார். திமுக ஆட்சிக்கு ஆதரவாக அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது அதிமுகவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் தொகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கனகராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனிடையே கனகராஜ் உயிரிழந்ததை அடுத்து நடந்த சட்ட மன்ற இடைத்தேர்தலில் அவரது உறவினரான கந்தசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2021 தேர்தலிலும் தொடர்ந்து அவர் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.