நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு 1001 ரூபாய் வழங்கப்படும் என டிவிட்டரில் பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடை வீதி காவல் துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவையில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. கோவை மாநகர பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. கோட்டைமேடு பகுதியில் மழை காரணமாக மரம் விழுந்ததில் 4 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.


கோவை மாவட்டம் பொகலூர் பகுதியில் விபத்தில் சிக்கிய தம்பதியினரை அன்னூர் காவல் நிலைய ஆய்வாளர் நித்யா தூக்கிச் சென்று முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காப்பாற்றினார். சாலையில் குறுக்கே வந்த நாய் மோதி தூக்கி வீசப்பட்ட தம்பதியினரை, காப்பாற்றிய காட்சிகள் அருகேயிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு ஆய்வாளர் நித்யாவிற்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.


திருப்பூர் மாவட்டம் தளி பகுதியில் தங்கராஜ் என்பவரிடம் இருந்து கார் மற்றும் நகைகளை வழிப்பறி செய்து தப்பிய இளைஞர்களை, பொள்ளாச்சி காவல் துறையினர் சினிமா பாணியில் போக்குவரத்து நிறைந்த சாலையில் தூரத்திச் சென்று மடக்கிப் பிடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது. ராபின், அருள்ராஜ், சேவாக், மாரியப்பன் ஆகிய 4 பேரை பிடித்து தளி காவல் துறையினரிடம் பொள்ளாச்சி காவல் துறையினர் ஒப்படைத்தனர்.


உதகையில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கன மழையால் மழை நீர் வெள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. காந்தல் எனும் பகுதியில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.


சேலம் மாவட்டத்தில் இன்று 9 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் 1.35 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த மாவட்ட நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.


தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஆள் கடத்தல் வழக்கில் கைதான அதிமுக விவசாய பிரிவு மாநில தலைவர் டி.ஆர். அன்பழகன், நெஞ்சு வலி என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனையில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். 


தமிழகத்தில் உள்ள 12 வன மண்டலங்களுக்கும் தலா 1 ஜேசிபி இயந்திரம் வாங்கப்பட்டு, யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க அகழி வெட்ட பயன்படுத்தப்படும் என தருமபுரி ஆய்வு கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


தருமபுரி மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர்மழையால் அரூர் பெரியார் நகர் பகுதியில் குடியிருப்புக்களை சூழ்ந்துள்ள தண்ணீரால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.