கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் வீடு, கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி வீடு, பள்ளி முதல்வர் அறை, மாணவியின் நண்பர் வீடு ஆகிய இடங்களில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 2 செல்போன், ஒரு மடிக்கணினி, மாணவியின் நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம் பன்றிக்காய்ச்சல் உறுதியான இருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இருவருக்கும் வீரியம் குறைந்த இன்ப்லுயன்சா ஏ வகை காய்ச்சல் பாதிப்பு தான் ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கவின் கூட்டாளி சனுகா தனநாயகா மற்றும் அவருக்கு அடைக்கலம் அளித்த கோபால கிருஷ்ணன் ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு சரவணம்பட்டி பகுதியில் தங்கியிருந்த அங்கொட லொக்கா மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல் துறையினர், பெங்களூருவில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்தனர்.


வட கிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையும் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.  


நீலகிரி மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளார். தீபாவளி பண்டியையின் போது மது போதையில் நிர்வணமாக அடுத்தவரின் வீட்டிற்குள் சென்று ரகளை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலேயே விட்டுக்கொடுக்கப்பட்டது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த திமுகதான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.


மேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் கடந்த ஆட்சியில் தேர்தல் நேரத்தில் அவசரகதியில் தொடங்கப்பட்டதால், அரைகுறையாக விடப்பட்டு ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே நீர் செல்கிறது என அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். உபரிநீர் திட்டத்தை திமுக ஆட்சிதான் முழுமையாக நிறைவேற்றும் எனவும், நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட பிறகு உபரிநீர்த்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் எனவும் சேலத்தில் அவர் கூறினார்.


தமிழகத்தில் வனப்பகுதிகளை 33 சதவிகிதமாக அதிகரிக்க பணிகள் தீவரப்படுத்தப்பட்டுள்ளன  என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வனவிலங்குகளால் பாதிப்புக்கு உள்ளான வழக்குகளில் இழப்பீடு வராதவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வனப்பகுதிகளில் மண் சார்ந்த மரங்களை அதிகரிக்க நிபுணர் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.


தருமபுரி மாவட்டம் அரூரில் பெய்த கன மழையால், குடியிருப்பு பகுதிகளில்  வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் விழுந்த சம்பவத்தில் தந்தை, மகள் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.