கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட கனகராஜின் உறவினர் ரமேஷுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரமேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று கோவையில் பல்வேறு பகுதிகளில் காலையில் மிதமான மழை பெய்தது. பள்ளிகளில் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார் அளிக்க பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். வருகின்ற 19-ஆம் தேதிக்கு பின்னர் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


தீபாவளி பண்டிகையன்று அதிக மது குடித்த 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, மதுவில் சயனைடு கலந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. பார்த்திபன், முருகானந்தம், சக்திவேல் ஆகிய மூவரை முன் விரோதம் காரணமாக வெளிநாட்டு ரக மதுவில் சயனைடு கலந்து கொடுத்து, கொலை செய்த ராஜசேகர் என்பவரை பந்தயசாலை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை மாநகராட்சி வளர்ச்சிக்காக 200 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


கோவையில் கொரோனா, டெங்கு காய்ச்சலை தொடர்ந்து பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் உறுதியாகி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியாகியுள்ள நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக நீலகிரி மலை இரயில் சேவை வருகின்ற 30 ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.


காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் தமிழக  எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர் வரத்து சரிந்து வருகிறது. வினாடிக்கு 48,000 கன அடியிலிருந்த நீர் வரத்து,  45,000 கன அடியாக குறைந்துள்ளது.


தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியில் பெய்த கன மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், அரசனத்தம், கலசப்பாடி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தில் கிராம மக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், பல்வேறு இடங்களில், அறுவடைக்கு தயாரான நிலையில் வயலில் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.