கோவையில் விடிய விடிய மது அருந்தி தீபாவளி கொண்டாடிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 



கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்திபன் (31). இவரது நண்பர்கள் முருகானந்தம் (55), சக்திவேல்(61). இவர்களில் பார்த்திபனும், சக்திவேலும் பெயின்டராக பணி புரிந்து வருகின்றனர். தென்காசியை சேர்ந்த முருகானந்தம் சமையலராக வேலை பார்த்து வந்தார். நண்பர்களான மூவரும் நேற்று இரவு தீபாவளி கொண்டாடுவதற்காக இரவு நீண்ட நேரம் மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் மூவரும் மீண்டும் ஒரு முழு மது பாட்டிலை பிளாக்கில் வாங்கியுள்ளனர். 


அருந்ததியர் வீதி அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அமர்ந்து 3 பேரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் சக்திவேல் மட்டும் அந்த கட்டிடத்தின் அருகில் அமர்ந்திருந்த நிலையில் மயங்கி விழுந்துள்ளார். முருகானந்தம் பாரதியார் சாலையில் நடந்து சென்ற போது, மயங்கி விழுந்துள்ளார். இருவரையும் மீட்ட அப்பகுதி மக்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள்  இருவரும் உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர்.  இதனையடுத்து அவர்கள் இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதனிடையே இவர்களுடன் மது அருந்திய பார்த்திபனை உறவினர்கள் தேடிய போது, அவர் வீட்டில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து காட்டூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பார்த்திபன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் இரவு மதுக் குடித்த பின்  மீண்டும் காலையில்  பிளாக்கில்  மதுபானம் வாங்கிய நிலையில், யாரிடம் மது பானம் வாங்கப்பட்டது என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதி அருந்திய நிலையில் கைப்பற்றபட்ட மதுபான பாட்டிலில் இருந்த மதுவினை காவல் துறையினர் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். மேலும்  மூவரும் மது அருந்திய இடத்தில் இருந்த பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றையும் தடய அறிவியல் துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்திய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர


 

ட்விட்டர் பக்கத்தில் தொடர


 

யூடிபில் வீடியோக்களை காண