• கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினருக்கு, நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவ்வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் சகோதாரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

  •  

  • பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை வருகின்ற நவம்பர் 2 ம் தேதி ஒத்திவைத்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று இவ்வழக்கில் கைதான 9 பேரும் காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடந்த முறை குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறைக்கு செல்லும் வழியில், வாகனத்தை நிறுத்தி உறவினர்களை சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

  •  

  • கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட கரியன் படுகை வனப்பகுதியில் தந்தங்கள் இல்லாமல் யானையின் உடல் சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தந்தங்கள் வெட்டி கடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அதே பகுதியில் புதரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த யானை தந்தங்களை வனத்துறையினர் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

  •  

  • கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள முதலிபாளையத்தை சேர்ந்த 3 மாணவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர். விளையாடச் சென்ற சதீஷ்குமார், சபரிவாசன், பூபதி ஆகியோர் குட்டையில் சேறு, சகதியில் சிக்கி உயிரிழந்தனர். 3 பேரின் உடல்களை மீட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • கோவையில் நாளை 7 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 1112 தடுப்பூசி முகாம்கள் மூலம் 1.50 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 6 இலட்சத்து 68 ஆயிரத்து 861 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

  • சிறுவாணி அணையின் முழு கொள்ளளவும் தண்ணீரைத் தேக்கவும், சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.

  • கோவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

  • ஆத்தூர் அருகே வெள்ளப்பெருக்கில் சிக்கி போராடிக்கொண்டிருந்த பெண் மற்றும் குழந்தை இருவரையும் பத்திரமாகக் காப்பாற்றிய இருவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகான  நகர்ப்புற தேர்தலை விரைந்து நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அனைத்து துறை அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையர் மிகவும் சவாலான தேர்தல் பணியை சட்டத்திற்கு உட்பட்டு செய்தால் எவ்வித பிரச்னையும் வராது என அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கினார்.

  • கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் ஒரு மணி நேரத்தில் 65 பேரை ஒரு தெருநாய் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பியோடிய நாயை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.