கோவை கொடிசியா மைதானத்தில் இசைஞானி இளையராஜாவின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு, இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்றார். அப்போது தான் இசையமைத்த திரைப்பட பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேடையில் இளையராஜா பேசும் போது, தனக்கு இளையராஜா என பெயர் வருவதற்கான காரணத்தை விளக்கி கூறினார்.
இளையராஜா..
அப்போது பேசிய அவர், “எனக்கு எனது அப்பா முதலில் வைத்த பெயர் ஞான தேசிகன். என்னுடைய ஜாதகத்தை பார்த்து அந்த பெயரை வைத்தார். ஸ்கூலில் சேர்க்கும் போது ராசையா என கூப்பிடுவதற்கு ஈஸியாக இருக்க வேண்டுமென மாற்றிடாங்க. ராசையா, ராசையா என வந்த போது, எனது விஷன் மியூசிக் மாஸ்டரிடம் போகுறப்பா எனக்கு முதல் பாடல் சொல்லிக் கொடுத்தார். அப்போ நோட் புக்குல பேர் எழுதுவதற்காக பெயர் என்னடா எனக் கேட்டார். ராசையா என்றேன். ராசையா நன்றாக இல்லை. ராஜா என மாத்திக்கோ என்றார். சரி என்றதும் ராஜா, ராஜா எனப் போனது.
அப்புறம் படம் கிடைச்சதும் யார் பெயரை போடுறீங்கனு கேட்டார். இல்ல நாங்க பாவலர் பிரதர்ஸ்னு நாடு முழுக்க கச்சேரி பண்ணிட்டு இருக்கோம். பாவலர் பிரதர்ஸ்னு போடலாம்னு சொன்னேன். பாவலர் பிரதர்ஸ் எல்லாம் பழைய பெயர். டிகேஎஸ் பிரதர்ஸ் மாதிரி வரும். அப்போ ராஜானே போட்டுகங்க. ராஜானா ஏவிஎம் ராஜா இருக்கார். அவர் வேணா மூத்த ராஜா, நீ இளைய ராஜா. அவ்வளவு தான். அப்படி என் பெயர் நான் வைத்தது இல்லை. சிவன் தனக்கே சிவன்னு பெயர் வைச்சுக்கீட்டானா? வைக்கமாட்டார். நாம தான் அவரை சிவன்னு கும்பிடுகிறோம்” எனத் தெரிவித்தார்.
முதலமைச்சர் கருணாநிதி
இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனக்கு இசைஞானி என பட்டம் சூட்டியது குறித்து இளையராஜா நெகிழ்ச்சியுடன் பேசினார். அப்போது பேசிய அவர், “என் அப்பா எனக்கு ஞான தேசிகன் என பெயர் வைத்ததை, கலைஞர் எப்படி அந்த ஞானியை கொண்டு வந்து இசையோடு சேர்த்து இசைஞானி என பொதுமக்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் வைத்த்து இவரை இசைஞானி என அழைக்கிறேன் என அப்பட்டத்தை எனக்கு கொடுத்தார்.
அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது? எனது தந்தை வைத்த பெயர் இவருக்கு எப்படி தெரிந்தது? அந்த உணர்வுகளை அவரால் உணர முடியும். அவர் வழியில் வரும் நமது முதல்வரும் நாட்டை நடத்திக் கொண்டு செல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவர் இந்த நாட்டிற்கு செய்வதை எல்லாம் எனக்கு செய்வதாக எடுத்துக் கொள்கிறேன். எனக்கென யாரிடமும் எதுவும் கேட்க மாட்டேன். கலைஞரிடம் அவ்வளவு மரியாதை எனக்கு.
ஏனென்றால் எனக்கு இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தார் என்பதற்காக அல்ல. தனிப்பட்ட முறையில் தமிழக மக்களை முன்னேற்ற அவர் பட்ட பாடெல்லாம் அரசியல் வட்டாரத்தில் உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். அதே நேரத்தில் பொது வாழ்வில் அவர் செய்த நல்ல காரியங்கள் தெரியும். அவர் வழியில் செல்லும் நமது முதல்வரும் நீண்ட நாள் அவரது கனவை நிறைவேற்றி வைப்பார் என நான் முழு மனதுடன் நம்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.