தமிழ்நாட்டில் முதல் முறையாக புலிக் குட்டிக்கு வேட்டையாடும் பயிற்சி அளிக்க 75 லட்ச ரூபாய் செலவில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட கூண்டிற்குள் புலிக்குட்டியை வனத்துறையினர் விட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள முடிஸ் என்ற இடத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உடல் நலக்குறைவோடு 8 மாதமான ஆண் புலிக்குட்டி சுற்றி திரிந்து வந்தது. இதையடுத்து அந்த ஆண் புலிக்குட்டியை மானாம்பள்ளி வனத் துறையினர் மீட்டு ரொட்டிக் கடை பகுதியில் உள்ள மனித வன விலங்கு மோதல் தடுப்பு மையத்தில் வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்பு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாலும், வாகன போக்குவரத்து சத்தம் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்து புலிக்குட்டியை மானாம்பள்ளி வனப்பகுதிக்குள் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
கடந்த 9 மாதங்களாக வனத்துறையினர் அந்த ஆண் புலிக்குட்டியை சிகிச்சை அளித்து பராமரித்து வந்தனர். தற்போது அந்த புலிக்குட்டிக்கு ஒன்றரை வயது ஆகும் நிலையில், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது. புலிக்கு கூண்டிற்குள் உணவு அளிக்கப்பட்ட காரணத்தினால் புலியை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட முடியாது என்பதாலும், புலி வேட்டையாடும் திறன் இல்லாமல் இருப்பதாலும் புலிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதன்படி சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் கம்பி வேலி அமைத்து தண்ணீர் வசதி, ஓடி விளையாட கூடிய வசதி அமைத்து கொடுத்து சிறிய விலங்குகளை வேட்டையாடும் பயிற்சி அளிக்கப்பட்ட பின்பு புலியை வனப்பகுதிக்குள் விடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.75 லட்சம் செலவில் வனத்துறையினரால் பெரிய கூண்டு ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் வேட்டையாடும் பயிற்சி அளிப்பதற்காக கூண்டிற்குள் புலிக்குட்டியை வனத்துறையினர் விட்டனர். புலிக்கு மயக்க மருந்து செலுத்தி கொண்டு வரப்பட்டு, புதியதாக அமைக்கப்பட்ட கூண்டில் விடப்பட்டது.
அக்கூடாரத்தின் சிறப்பு அம்சமான ஓய்வு அறை, தண்ணீர் தொட்டி, படுக்கை, மரக் கூடாரம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இக்கூண்டிற்குள் விடப்பட்ட புலியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து வேட்டையாடும் பயிற்சி அளிக்கவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்வில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராம சுப்பிரமணி, பொள்ளாச்சி இணை இயக்குனர் கணேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்