கோவையில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ரசீது கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் நோயாளியின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சாலையில் சண்டையிட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. அதேசமயம் கோவையில் மே மாதத்தில் ஏறுமுகத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள், ஜீன் மாதத்தில் இறங்கு முகத்தில் உள்ளது. கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. மேலும் பல இடங்களில் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும், கொரோனா நோயாளிகளின் உறவினர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனை ஊழியர்களும், கொரோனா நோயாளிகளின் உறவினர்களும் சாலையில் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாதம் 24-ஆம் தேதி சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 4 நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி ஆறுச்சாமி உயிரிழந்தார். இந்நிலையில் 1 மாதத்திற்கு பின் நேற்று மீண்டும் அந்த மருத்துவமனைக்கு வந்த ஆறுசாமியின் உறவினர்கள், சிகிச்சை விபரம் மற்றும் கட்டணத்திற்கான இரசீது ஆகியவற்றை கேட்டுள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் இரசீது கொடுக்கவில்லை எனவும், இதனால் ஆறுச்சாமியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த மருத்துவரின் செல்போனை பிடுங்கிவிட்டு உறவினர்கள் வெளியே வந்துள்ளனர். அப்போது, மருத்துவமனை ஊழியர்கள் பின் தொடர்ந்து வந்தபோது, நோயாளியின் உறவினர்களும், மருத்துவமனை ஊழியர்களும் சாலையில் மோதிக்கொண்டனர். சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்டு, மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் ஆறுச்சாமியின் உறவினர்கள் 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 7 பேர் மீதும் மருத்துவமனை மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரு தரப்பினரும் சாலையில் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.