கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதி பட்டணம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் வீதி சேர்ந்தவர்கள் செல்லத்துரை மகாலட்சுமி தம்பதியரினர். இவர்களது 16 வயது மகள்  சிவசுந்தரி. சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் சிவ சுந்தரி பள்ளிக்கு சென்றார். பள்ளி வளாகத்தில் சிவ சுந்தரி திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து அவரை ஆசிரியர்கள் நெகமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சை தேவைப்படுவதாக கூறியுள்ளனர்.



இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிவ சுந்தரியை அனுமதித்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே சிவ சுந்தரியை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நெகமம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி எதனால் உயிரிழந்தார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. மாணவி சிவ சுந்தரி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தாரா, அவருக்கு ஏதேனும் உடல் நல பாதிப்புகள் இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் உடற்கூராய்வு முடிவுகள் வந்த பின்னரே, மாணவி உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டு இருந்தன. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சுழற்சி முறையில் சுகாதாரத் துறை சார்பில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பொள்ளாச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகினது. இந்நிலையில் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.