திருப்பூர் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த இரயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் சேவை மையத்தின் அறிவிப்பு பதாகை, ஆங்கிலம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் எழுதப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக அச்சிடப்பட்ட காகித அறிவிப்பு பதாகை சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டது. இதில் ஹிந்தி எழுத்துக்களில் ’சகயோக்; என எழுதப்பட்டிருந்தது. அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் வருவதால் அவர்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்டிருப்பதாக பலரும் எண்ணிய நிலையில், அதன் மேலே ஆங்கிலத்திலும் சகயோக் எனவும் தமிழ் எழுத்திலும் சகயோக் என அச்சிடப்பட்டிருந்தது. 




தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளை புறக்கணிக்கப்பட்டு, இந்தி மொழியில் மட்டும் அறிவிப்பு பதாகை இருந்தது. இதனால் அதன் அர்த்தம் பலருக்கும் புரியாத சூழல் ஏற்பட்டது. ஹிந்தியில் சகயோக் என எழுதப்பட்டால் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர் எனவும், தமிழில் சேவை மையம் என எழுதப்பட்டால் தானே அனைத்து மொழியினருக்கும் புரியும் என இரயில் பயணிகள் தெரிவித்தனர். மேலும் அனைத்து மொழியினரும் சகயோக் என படித்தால் அதன் அர்த்தத்தை எப்படி புரிந்து கொள்வது எனக் கேள்வி எழுப்பிய இரயில் பயணிகள், இது அப்பட்டமான இந்தி திணிப்பு என தெரிவித்தனர். இது தொடர்பான  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இந்தி திணிப்பிற்கு கண்டனம் தெரிவித்தனர்.இதனையடுத்து சுதாரித்த ரயில்வே அதிகாரிகள் சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு பெயர் பதாகை கிழிக்கப்பட்டு அகற்றினர்.



இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “திருப்பூர் ரயில் நிலைய சேவை மைய பெயர் தமிழில் எழுதப்பட்டதை அகற்றி இந்தி எழுத்தால் எழுதியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் அதிகாரிகளால் இன்று அந்தப் பதாகை அகற்றப்பட்டுள்ளது. 'காவி'களின் இந்தித் திணிப்பை, 'கருப்பு' தார் கொண்டு அழித்த திராவிட மண் என்றும் அனுமதிக்காது. எச்சரிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.


இதே போல ’தொடர்வண்டி நிலையங்களா... இந்தி திணிப்பு மையங்களா? மறைமுக இந்தித் திணிப்பை கைவிட வேண்டும்’ என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு அலுவலகங்களாக இருந்தாலும்  பொதுமக்களுக்கு சேவை வழங்கும் தொடர்வண்டி நிலையம் போன்ற இடங்களில் உள்ளூர் மொழியான தமிழில் தான்  அறிவிப்பு பலகைகள்  முதன்மையாக வைக்கப்பட வேண்டும். கூடுதலாக ஆங்கிலம், இந்தியில் வைத்துக் கொள்ளலாம்.



ஆனால், திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் சேவை மையம் என்ற தமிழ்ச் சொற்களால் ஆன பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற இந்தி சொல் தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இந்தி தெரிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இது  புரியாது. இது புதிய வகை இந்தித் திணிப்பாகும். புதிய, புதிய வகைகளில் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் தொடர்வண்டித்துறை விளையாடக் கூடாது. இந்தியைத் திணிக்கும் இத்தகைய அறிவிப்பு பலகைகள் திருப்பூர் உட்பட எங்கு இருந்தாலும்  அவற்றை தொடர்வண்டித் துறை உடனடியாக அகற்ற வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.