நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற பேச்சு போட்டியை துவக்கி வைத்தார். பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய ஆ.ராசா, ”நான் படித்த காலத்தில் கலைக் கல்லூரியில் மட்டும் தான் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. பொறியியல், மருத்துவ மாணவர்களுக்கு அப்போட்டி நடத்தவில்லை. அரசியலில் பொறியியல், மருத்துவ மாணவர்களுக்கு போதுமான வெளிச்சம் கிடைக்காமல் இருந்ததை இங்கு போக்கி இருக்கின்றோம். பள்ளி பருவத்தில் எனக்கு கலைஞரையும், அண்ணாவையும் தெரியாது. பரிசுக்காக ஒப்பிவித்த வரிகள் தான் என்னுள் ஏற்பட்ட மாற்றம். பரிசு கிடைக்கும் என்பதால் அண்ணா மறைவிற்கு கலைஞர் எழுதிய இரங்கல் கவிதையை படித்தேன். அது மாற்றத்தை ஏற்படுத்தியது.
75 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பின்பு 75 ஆயிரம் கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்து இருப்பதாக பிரதமர் சொல்கின்றார். 1975 க்கு முன்னாடியே தமிழகத்தில் அத்தனை கிராமங்களுக்கும் மின் இணைப்பு கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. வெற்றி தோல்விகளை தாண்டி, இங்கு இருக்கும் மாணவர்கள் அரசியலில் ஜொலிக்க முடியும்” எனத் தெரிவித்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் வெளியில் வந்த ஆ.ராசாவிடம், கோவை திருமலையாம் பாளையம் பகுதியில் அவரது நிலங்களை அமலாக்கதுறை முடக்கியது குறித்த கேள்விக்கு, “அமலாக்கத்துறை நடவடிக்கையில் புதியதாக எதுவும் இல்லை. புதியதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை. அந்த உத்திரவினை படித்து பாருங்கள்” எனத் தெரிவித்தார். அமலாக்கத்துறை நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, “ஏன் பதுங்கிக்குவாங்களா?” எனப் பதில் அளித்தபடி ஆ.ராசா கிளம்பி சென்றார். கோவையில் அமலாக்கத் துறையால் ஆ.ராசா தொடர்புடைய இடங்கள் முடக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அது குறித்த அறிவிப்புக்கள் நிலத்தில் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.